Skip to content
கோநாய்

கோநாய் என்பது ஓநாய்

1. சொல் பொருள்

(பெ) ஓநாய், ஒரு விலங்கு.

2. சொல் பொருள் விளக்கம்

கோநாய்
கோநாய்

நரியினத்தோடு தொடர்புடைய , ஆனால் நரியின் வேறான ஒரு விலங்கு ஓநாய் என்பதாகும் . இதைச் சங்க நூல்களில் கோநாய் என்று கூறுவர் . நற்றிணையிலும் , களவழி நாற்பதிலும் பழமொழி நானூற்றிலும் மட்டுமே கோநாயைப் பற்றிய செய்தி வருகின்றது

போகிய நாகப் போக்கருங் கவலைச்
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண
வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்பு அழீஇக்
கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே – நற்றிணை . 82

இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்
சுடரிலங் கெஃக மெறியச்சோர்ந் துக்க
குடர் கொண்டு வாங்குங் குறுநரி கந்தில்
தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட்
சேய்பொரு தட்ட களத்து – களவழி நாற்பது . 34

பெரியாரைச் சார்ந்தார் மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண் கொண் டொழுகல்- வெறியொலி
கோநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு – பழமொழி. 292

கோநாய்
கோநாய்

பழமொழி நானூற்றில் “வெறிகொள் கோநாயினம் வெரூஉம் வெற்ப” எனக் கூறியதைக் கவனிக்க வேண்டும் . கோநாய் இனமெனக் கூறப்பட்டுள்ளது . காட்டில் வாழும் நாயின விலங்குகளில் செந்நாயும் , ஓநாயும் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் குணமுடையவை என விலங்கு நூலார் கூறுவர் . கோநாய் இனமாக வெறி கொண்டு வருவதைக் கண்டு பயந்ததாகக் கூறுவது உண்மையான செய்தியே .

ஓநாய்க் கூட்டத்திற்குக் காட்டில் உள்ள மான் முதலிய விலங்குகள் மிகவும் அஞ்சும் . ஓநாய் கூட்டமாக மான் முதலிய விலங்குகளை வேட்டையாடித் தின்னும் . ஓநாய்கள் சில சமயங்களில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் . சில சமயங்களில் மனிதரைக்கூடத் தாக்கித் கொல்வதுண்டு என்று விலங்கு நூலார் கூறுகின்றனர் . ஆதலின் வெறி கொண்ட கோநாயினங் கண்டு வெற்பன் அஞ்சியதாகக் கூறியதில் உண்மை யிருக்கின்றது .

நற்றிணையில் காட்டுப் பன்றியைக் கொன்ற ஓநாய்களைப் பற்றிய செய்தி கூறப்படுகின்றது . காட்டுப் பன்றியை ஓநாய்கள் தாக்கிச் சேற்றில் புரட்டி அதன் தசைகளைப் பிளந்து கவ்விக் கொன்றதைக் கண்ட கானவர் அந்தக் கோநாய்களை ஓட்டி அவை கொன்ற பன்றியின் தோல் அழிந்த தசையை நிறையக் கைக் காண்டனர் என நற்றிணை கூறுவது உண்மையான செய்தி யெனவே தெரிகின்றது .

கோநாய்
கோநாய்

செந்நாய்களும் ஓநாய்களும் வேட்டையாடிக் கொன்ற மான்களைக் காட்டில் வாழும் மனிதர்கள் கவர்ந்து உண்பது வழக்கம் . இதையே நற்றிணை கூறுவதாகத் தெரிகின்றது . இது போன்ற ஒரு செய்தி நேரில் கண்ட ஒருவர் Sunday Standard ( 19-11-67 ) என்ற நாளிதழில் எழுதியிருந்தார் . கோள் நாய் என்ற நற்றிணைச் சொற்கு , கொள்ளும் நாய் என்று பொருள் கொண்டது பொருத்தமின்று. செந்நாய் என்று கொள்ள வேண்டிய விடத்தில் செல்லும் நாயெனும் பொருளில் செல்நாய் என்று கொண்டு சென்னாய் என்ற பாடத்தைச் சிறந்த பாடமாகப் பதிப்பித்ததைப் போன்றது .

கானவர் வேட்டையாடக் கூட்டிச் சென்ற வீட்டுநாய் ‘பரியல் நாய் , கத நாய் என்றெல்லாம் சங்க நூல்களில் கூறப்படுகின்றது . கோள்நாய் , கோணாய் என்பதற்கு வேட்டைக்குதவும் வீட்டு நாய் எனப் பொருள் கொண்டு சிலர் உரையெழுதியது பொருத்த மற்றதாகும் . களவழி நாற்பதில் போர்க்களத்தில் குறுநரி இறந்த மனிதனின் குடலைக் கடித்துத் தின்பது தூணில் கட்டப்படாது சங்கிலியுடன் கூடிய கோநாயைப் போலிருந்தது என்று கூறு வதைக் கவனிக்க வேண்டும் . குடல் சங்கிலி போலத் தோற்றமளித்தது . குறுநரி கோநாயைப் போல இருந்தது .

கோநாய் குறுநரியைப்போல் இருந்தது என்பதில் பொருத்தம் உள்ளது . ஏனெனில் உருவிலும் நிறத்திலும் ஒப்புமை ஓநாய்க்கும் நரிக்கும் உள்ளது. இந்த விடத்தில் கோணாய் என்பதற்கு வேட்டையாடும் வீட்டு நாய் என்று உரையெழுதியது பொருத்தமற்றது. சங்க காலத்தில் கோநாயெனும் ஓநாயையும் தெளிந்திருந்தனரென நன்கு தெரிகின்றது .

ஓநாய் பெரும்பாலும் காட்டிலே காணப்பட்டதால் , தென்னிந்தியாவில் அருகிக் காணப்பட்டதால் ஓநாயைப் பற்றி மிக அரிதாகச் சில செய்திகளே காணப்படுகின்றது . செந்நாயைப் பற்றிப் பல செய்திகள் காணப்படும்போது ஓநாயைப் பற்றி மிக வறிதாக ஒன்றிரண்டு செய்திகளே காணப்படுவதற்குத் தமிழ் நாட்டில் ஓநாயின் அருமையே காரணம் .

கோநாய்
கோநாய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

The Wolf

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே – நற்றிணை . 82

கோணாய் புரையு மடர்பைம்பூட்
சேய்பொரு தட்ட களத்து – களவழி நாற்பது . 34

கோநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு – பழமொழி. 292

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *