சொல் பொருள்
(பெ) இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள்,
சொல் பொருள் விளக்கம்
இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள்,
இந்தச் சுணங்கு என்பது பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு என்ற ஒரு கருத்து உண்டு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of colour change in the form of yellow dots in a young lady’s chest
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆக வன முலை அரும்பிய சுணங்கின் மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என – அகம் 6/12,13 என்ற அடிகளால், சுணங்கு என்பது தாய்மைப்பேறு அடைந்த பெண்ணுக்கும் வரும் என்பது தெளிவாகிறது. மேலும், இது வெறும் பொலிவுமட்டும்தானா என்று பார்ப்போம். முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின சுணங்கும் சில தோன்றினவே – குறு 337/1-4 முலைகள் முகிழாய் முகிழ்த்தன; தலையின் கிளைத்த கூந்தல்கொத்துக்கள் கீழே விழுந்து தொங்குகின்றன; செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன; தேமலும் சில தோன்றின பருவமடைந்த ஓர் இளம்பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்களை இப்பாடல் குறிக்கிறது. எனினும் சுணங்கும் சில தோன்றினவே என்ற சொற்கள், இது மாற்றம் மட்டும் அல்ல, புதிதாய் தோன்றிய தோற்றம் எனவும் தெரிவிக்கிறது. அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11 என்ற வரியால், இந்தச் சுணங்கு மேனியில் அரும்புவது என்பது உறுதிப்படுகிறது. மேலும், சுணங்கு அணி ஆகம், சுணங்கு அணி இள முலை எனப் பல இடங்களில் வருவதால், இது பொதுவான மேனி மாற்றம் அல்ல என்றும், புதிதாய்த் தோன்றிய ஓர் உறுப்பு என்றும் தெளியலாம். எனில், இந்த உறுப்பு எங்கே தோன்றுகிறது என்ற வினா எழுகிறது. இந்த அடிகளைப் பாருங்கள். அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35 ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12 சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12 இவற்றைப் போன்ற இன்னும் பல அடிகளைக் காணலாம். ஆகம் என்பது மார்பு. எனவே,இந்தச் சுணங்கு பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றுகிறது. மார்பு என்பது கழுத்துக்குக் கீழே, வயிற்றுக்கும் மேலே உள்ள பகுதி. இந்தப் பரந்த பரப்பில் சுணங்கு குறிப்பாக எங்கே தோன்றுகிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/6 ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16 சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை – அகம் 343/2 என்ற அடிகள், இந்தச் சுணங்கு, பெண்களின் முலைகளின் மேல் படர்கிறது என்று தெரிவிக்கின்றன இந்தச் சுணங்கு எவ்வாறு இருக்கும் என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பொன் பொதிந்து அன்ன சுணங்கின் – நற் 26/8 பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய – அகம் 279/4 என்ற அடிகளால், இது பொன்னிறமாக இருக்கும் என்று தெரியவருகிறது. ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/4 என்ற அடியால், இது புள்ளி புள்ளியாக இருக்கும் என்பதும் தெரிய வருகிறது. தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17 என்ற அடி, சுணங்கு என்பது வேங்கை மலர் போல் இருக்கும் என்கிறது. எனவே, ஐயத்துக்கிடமின்றி, பெண்களின் மார்புப்பகுதியில், குறிப்பாக முலைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் புள்ளிபுள்ளியாக வேங்கை மலர் போன்று அரும்பியிருப்பதே சுணங்கு என்பது பெறப்படும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்