சொன்றி என்பது சோறு
1. சொல் பொருள்
(பெ) சோறு, வேகவைத்த அரிசி
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவடையில் வரும் சோறு என்பதே சொன்றி.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
boiled rice
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி/புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 193,194
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி/ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 131,132
மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
இழித்து ஆனா பல சொன்றி/உண்டு ஆனா கூர் நறவின் – மது 212,213
உண்டு குறையாத பலவாகிய சோறும்,
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி/வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 201,202
விழா கொண்டாடினால் போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை
அடங்கா சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
அளவுக்கதிகமான சோற்றுத்திரளுடன், அழகிய பலவாகிய புதிய
வரை கோள் அறியா சொன்றி/நிரை கோல் குறும்தொடி தந்தை ஊரே – குறு 233/6,7
வரையறுத்துக்கொள்ளுதலை அறியாத சோற்றினையும் உடைய
கண்டு மதி மருளும் வாடா சொன்றி/வயங்கு கதிர் விரிந்து வான்அகம் சுடர்வர – பதி 24/22,23
கண்டு வியக்கும் குறையாத சோறு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12
முல்லை நிலத்தில் விளையும் வரகுச் சோற்றுடன் பெறுகின்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்