சொல் பொருள்
(பெ) வீரமரணம் அடைந்தவரின் நினைவாக எழுப்பப்படும் கல்,
சொல் பொருள் விளக்கம்
வீரமரணம் அடைந்தவரின் நினைவாக எழுப்பப்படும் கல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hero-stone
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த நடுகல்லில் இறந்தவரைப் பற்றிய விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/7,8 பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில் பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை இந்த நடுகல்லுக்கு மயில் இறகு சூட்டுவர். உடுக்கு என்னும் கருவியை முழக்கி, கள்ளுடன், செம்மறியாட்டைப் பலியாகக் கொடுப்பர். நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/8-10 நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து, நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும் செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில் இந்த நடுகற்களுக்கு முன்பாக வேலினை ஊன்றி வைத்து, கேடகத்தைச் சார்த்திவைப்பர். பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/10-12 பெயரும் சிறப்பும் பொறித்து, வழிதோறும் மயில்தோகையினைச் சூட்டிய விளங்கும் நிலையினையுடைய நடுகல்லின்முன் ஊன்றிய வேலும் அதன்கண் சார்த்திய கேடகமும் பகைவர் போர்முனையையிருப்பை ஒக்கும். இந்த நெடுகல்லின் முன் காலையில் மலர்தூவி வணங்குவர். சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு இவர்ந்த ததர்க்கொடி அதிரல் நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/1-3 வில்லில் கோத்த கணையால் வீழ்ந்து இறந்த வழிச்செல்வோரின் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள் உயர்ந்த நிலையினையுடைய நடுகல்லின் காலைப்பலிக்குக் கூட்டப்பெறும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்