சொல் பொருள்
(வி) ஒலியெழுப்பு, கத்து,
சொல் பொருள் விளக்கம்
ஒலியெழுப்பு, கத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound, make a noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காற்றால் அசைக்கப்படும்போது, மூங்கிலின் அடிப்பிடிப்பு வேர்கள் எழுப்பும் ’நர நர’ என்ற ஓசை நரலுதல் எனப்படும்.. இது யானை பெருமூச்சுவிடுவதைப் போன்று இருக்கும் என்கிறது நற்றிணை. வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/1,2 வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை தறியில் கட்டப்பட்ட யானை வருத்தத்துடன் பெருமூச்சு விட்டதைப் போன்றிருக்கும் சங்குகளை முழக்கும்போது எழும் ஓசை நரலுதல் என்னப்படும். வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 185 சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க, குருகு எனப்படும் கொக்கு எழுப்பும் ஓசையும் நரலுதல் என்னப்படும். புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த வெண்_குருகு நரல வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே – அகம் 12/21-24 தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள் துயரத்துடன் இருக்கும் அன்றில் பறவைகள் எழுப்பும் ஓசை நலுதல் எனப்படும். மை இரும் பனை மிசை பைதல உயவும் அன்றிலும் என்பு உற நரலும் – நற் 335/7,8 கரிய பெரிய பனைமரத்தின் மேல் துன்புற்று வருந்தும் அன்றில் பறவைகளும் தம் எலும்புகள் நடுங்கக் கூவும் நாரைகள் ஒலியெழுப்பவது நரலுதலெனப்படும். ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/3-5 அசைகின்ற கிளையில் இருந்த அசைவான நடையைக் கொண்ட நாரை, நன்றாகச் செறிந்த பெரும் இரவில் நம் துயரை அறியாமல், நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்பும் பெட்டை மயில் கூவுவதும் நரலுதல் எனப்படும். இது ஊதுகொம்பு ஒலிக்கின்றது போல் இருக்கும் என்கிறது அகநானூறு. பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/9-11 பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை அயிரி ஆற்றினது அடைகரையின்கண் ஊதுகொம்பு என ஒலிக்கும். குடுமியையுடைய கொக்குகள் ஒலியெழுப்புவது நரலுதல் என்னப்படும். குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை ———————————————– அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/1-8 குடுமியையுடைய கொக்கின் பசிய காலினையுடைய பேடை ————————————————- அழகிய இடத்தையுடைய பனைமரத்தின்கண் விரைவாக அன்பு தோன்ற ஒலித்திருக்கும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்