Skip to content
நவ்வி

நவ்வி என்பது இரலை இனத்தை சார்ந்த ஒரு வகை மான்

1. சொல் பொருள்

(பெ) மான்,

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியங்களில் இரலை யினத்தைச் (Antilope ) சார்ந்த மூன்று வகை மான்கள் குறிப்பிடப்படுகின்றன . அவை இரலை, நவ்வி, மரையான் என்பனவாகும். இரலையின மான்களில் இரலைக் கடுத்த சிறப்புடைய மான் நவ்வி மானாகும் . இரலையைவிடச் சிறிதாகவும் மென்மையானதும் சாயல் அழகியதாகவும் ( A small gazelle of slender graceful build ) ST 6007 UUBID என்பர் . தமிழிலக்கியத்திலும் இதே கருத்து இந்த மானைப் பற்றி அக்காலத்தில் கொண்டிருந்தனர் எனத் தெரிகின்றது . பேராசிரியர் தொல்காப்பிய உரையில் ஓடும் புல்வாய் என்றதனானே மடனுடையன நவ்வி யெனவும் இடைநிகரன உழையெனவும் கொள்க என்றார் . நவ்விமானை மிக மடப்பம் பொருந்தியதாகக் கருதினரெனத் தெரிகின்றது . சேந்தன் திவாகரம் நவ்வி என்ற சொற்கு அழகு என்றொரு பொருள் கூறியிருப்பதையும் கவனிக்கவேண்டும் , சங்க நூல்களில் இம்மானைப் பற்றிச் சில செய்திகள் தாம் சில பாடல்களில் வருகின்றன .

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை –புறம் ,

…..இன்சிலை ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர் ” -அகம் 7

கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென ” -அகம் , 39.

செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கவ்வை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் – குறுந்தெ தாகை ,

முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கா
நவ்வி நோன்குளம்பு அழுந்தென எள்ளி – நற்றிணை , 124 .

பெருங்கவின் பெற்ற சிறுதலை நவ்வி
மடக்கண் பிணையொடு மறுகுவன வுகளச் – மதுரைக் காஞ்சி , 275-6

நவ்வி
நவ்வி

தமிழ் நூல்களில் அழகிய பெண்களின் சாயலுக்கு இம்மானை ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம் . மான்களில் மிகவும் மடப்பம் பொருந்தியதாகவும் பெரிய கண்ணை உடையதாகவும் கருதினதால் பெண்களுக்கு ஒப்பிட்டுக் கூறினர் . இதற்குச் சிறிய தலையும் பெரிய கண்ணும் இருப்பதாகப் புறப்பாடல் ( 21 ) கூறுகின்றது. மானினத்தில் நவ்விக்கும் இரலைக்கும் அழகிய கண்கள் இருப்பதாகச் சங்கப் புலவர்கள் கருதினர். இவைகளின் கண்களை மடக்கண் என்று அழைப்பர் .

கழிப்பெயர் களரில் போகிய மடமான்
விழிக்கண் பேதையொடு இனனிரிந் தோடக்
காமர் நெஞ்சமொடு அகலாத்
தேடூஉ நின்ற இரலை ஏறே ” – நற்றிணை 242 .

இரலையின் பெண்மானின் கண்ணை , விழிக்கண் பேதை என்று கூறியது அழகிய சொல்லாட்சியாகும் . ஒன்றை யொன்று தேடும் இரலை மானின் ஆணையும் பெண்ணையும் விளக்குமிடத்து ஆணைத்தேடி விழித்துப் பார்க்கும் பெண்மானின் கண்ணை விழிக்கண் பேதை என்றார் . இந்த இருமான்களின் கண்களையே பெண் களின் கண்ணிற்கு ஒப்பிட்டுக் கூறுவது மரபாகும் . நவ்வியின் மென்மையையும் அழகையும் நோக்கியே அதன் சாயலைப் பெண்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம் . மான்களிலே இது மிகவும் அழகிய சாயல் உடையது என்று கருதினதால் மதுரைக் காஞ்சியில் பெருங்கவின் பெற்ற சிறுதலை நவ்வி என்று வர்ணிக் கப்படுகின் றதைக் கூர்ந்து நோக்க வேண்டும் .

நவ்விமான் தமிழ்நாட்டில் அரிதாகக் காணப்படும் என்று விலங்கு நூலறிஞர் கூறுவர் . கிருஷ்ணை ஆற்றுக்குச் சிறிது தெற்கே இஃது அரிதாக இப்போது காணப்படுவதாகக் கூறுவர் . சங்க காலத்திலேயே நவ்விமான் தமிழ் நாட்டில் அரிதாகக் காணப்பட்டமையால் இதைப்பற்றிச் சங்க நூல்களில் சில செய்திகளே காணப்படுகின்றன. நவ்வி ஏறு இனிய குரலைக்கொண்டிருப்பதாக அகப்பாடல் ( 7 ) கூறுகின்றது . நவ்வி மான்கள் சிறு சிறு மந்தையாகக் காணப்படும் . அகப்பாடலிலும் ஏறுடை இனத்த என்று கூறுவதைக் கவனிக்கவும் . நவ்வி மான்கள் 20 அல்லது 30 மான்களாகக் கூட்டமாக வாழும் . மந்தையில் சில ஆண்கள் இருக்கும் . நவ்வி மான்கள் ஏதாவது தங்களுக்கு ஊறு வரும் என்று எதிர்பார்க்குங்கால் ஒரு முறையான தும்மல் போன்ற ஓசை யெழுப்பும் . இந்தி மொழியில் தும்மலிடும் விலங்கு என்ற பொருளில் இதை
‘ சின்காரா ( Chinkara ) என்றழைக்கின் றனர் . சிலை ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி ” என்று வரும் அகப்பாடல் ( 7 ) வரியில் நாறுயிர் நவ்வி என்று கூறுவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் . வெளிப்படுத்தும் மூச்சு என்ற பொருளில் நாறுயிர் என்ற சொல் நவ்வி மான்கள் வெளியிடும் தும்மல் ஓசையையே குறிக்கின்றது எனத் தெரிகின்றது .

நவ்விமான்கள் பெரும்பாலும் பாலையிலும் வறட்சியான நிலத்திலும் கானாற்றுப் படுகைகளிலும் காணப்படும் என்று விலங்கு நூலார் கூறுவர் . சங்க நூல்களிலும் பெரும்பாலும் பாலையில் பாடப் பட்டிருக்கின்றது . நவ்விமான்கள் எதையாவது கண்டு பயந்தால் திடுமெனக் குதித்துப் பாய்ந்து மிக விரைவாக ஓடிச் சிறிது தொலை சென்று நின்று திரும்பிப் பார்க்கும் தன்மை யுடையன. “ ஆரிடைஞெரேரெனப்பரந்து படு பாயல் நவ்வி பட்டென” என்று வரும் அகப் பாடல் ( 39 ) வரி நவ்வி திடுமென விரைந்து பாய்ந்து ஓடுவதையே குறிக்கின்றது . இதன் பொருள் எளிதாகக் கடக்க முடியாத வழியில் உன்னை நினைந்து வருங்கால் திடுமெனப் பரந்து பாயும் நவ்விமான்கள் என் கண்ணில் பட்டது என்று தலைவன் கூறுவதாக அமைந்திருக்கின்றது. நவ்விமான்கள் இரலைமான்களைப் போலச் சமவெளியிலும் , திறந்த புல்வெளிகளிலும் பெரும்பாலும்
வாழ்வதில்லை. கானாற்றுப் படுகரையிலும் கரடு முரடான வறட்சியான பகுதியிலுமே வாழ்கின்றன . அகப் பாடலும் ஆரிடை என்று எளிதில் கடக்க முடியாத நிலத்தில் வாழ்வதாகக் கூறுகிறது. இரலைமானைப் போலன்றி நவ்விமான்களுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் கொம்பு உண்டு . நவ்விமானை விலங்கு நூலார் gazelle leanetti என்பர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Indian Gazelle, gazelle leonetti, female deer

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப – நற் 124/6,7

நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கும் கொள்கலத்தைப் போல்

நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3

ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி/வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/10,11

பரந்து படு பாயல் நவ்வி பட்டு என – அகம் 39/16

சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/21

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “நவ்வி”

  1. இர.தீபக்

    அருமையான செய்திகளை சிறப்பான தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *