Skip to content

சொல் பொருள்

(பெ) 1. படுத்துத்தூங்குதல், 2. பட்டுக்கொள்ளுதல், சிக்கிக்கொள்ளுதல், 3. இறந்துபடுதல், 4. உடன்படுதல், 5. ஈடுபடுதல்,

சொல் பொருள் விளக்கம்

1. படுத்துத்தூங்குதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lie down and sleep, caught up, stuck, dying, consenting, agreeing, indulging

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்
கெடல் அரும் துயரம் நல்கி
படல் இன் பாயல் வௌவிளே – ஐங் 195/1-4

சங்கு ஈன்ற முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும்
கடலைச் சேர்ந்த தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள்
தீர்ப்பதற்கு முடியாத துயரத்தைக் கொடுத்து
படுத்துத்தூங்கும் இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள்

களைஞரும் இல்_வழி கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு – கலி 98/36,37

காப்பாற்றுவாரும் இல்லாத இடத்தில் ஆழப்பதிந்து, தேருடன்
நீ குறுமணலில் அகப்பட்டுக்கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வாயாக!

வெம் திறல் கூற்றம் பெரும்பேதுறுப்ப
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/10,11

வெம்மையான ஆற்றலையுடைய கூற்றுவன் பெரிய இறந்துபாட்டை எய்துவிக்க
என் தலைவன் பேதுறவெய்தி அதனால் இறந்துபட்டதை அறியேனாய் வந்தேன்

ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/7-10

இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும்,
கயல் போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு
(இத் தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதா

புரைய அல்ல என் மகட்கு என பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/13-15

பொருந்துவன அல்ல என் மகளுக்கு என்று தெய்வத்தைத் தொழுது
நமது களவொழுக்கத்தினைத் தெரிந்துவைத்து அமைதியுற்றிருக்கும் கொள்கையினையுடைய
நம் அன்னை முன் யாம் இக் களவொழுக்கத்தில் பட்டு ஒழுகல் எங்ஙனம் இயலும்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *