Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. நிலைகொள், 2. தங்கு, 3. வந்து அமர்,  4. மூழ்கு, 5. கவி,

2. (பெ) 1. பூமி, 2. முறை, வகை, 3. கோயில் முதலியவற்றுக்கு அன்றாடம் வழங்கப்படும் உணவுப்படி, நித்தியக்கட்டளை, 4. படிக்கட்டு,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be ingrained, rest, as clouds upon a mountain, settle, be immersed in water, rest upon, earth, manner, mode, Fixed daily allowance for food, step

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
துறை படி அம்பி அகம்_அணை ஈனும் – ஐங் 168/1,2

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
துறையில் நிலையாகக் கிடக்கும் தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும்

நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/7-10

எப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் தங்கும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே!

படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் – கலி 50/9-11

கதிர்களின்மேல் வந்து படியும் கிளிகள் பரவலாய்த் திரியும் பசிய கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில்,
அந்தக் கிளிகளை விரட்டுவதை மறக்கச்செய்ததனால், இனி நீ
இவளையே இடைவிடாமல் நினைத்துக்கொண்டிருப்பதைக் காத்துக்கொள்வதை இவள் விரும்புவாள்,

பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17

யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய)

உயர் சினை மருத துறை உற தாழ்ந்து
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை – புறம் 243/6-10

கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய
திருமருத நீர் பூ துறை – பரி 11/28-30

கள்ளினை வாயில் கொண்டு
பருகும் நிலமகளின் கழுத்து என்று கூறவா? பெரிய
திருமருத நீர்ப்பெருந்துறையை;

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/50-52

இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன்
வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம்
அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப – கலி 35/1,2

சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க, அந்தச் செல்வத்தை
அவனால் படியளக்கப்பட்டார் உண்பதுபோல், பலவான கிளைகளிலும் வண்டுகள் ஆரவாரிக்க,

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/9-11

வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில்
அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க
பெண்யானை, படிக்கட்டாக அமைக்க ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *