Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பரிதி, ஞாயிறு, 2. தேர்ச்சக்கரம், 3. திருமாலின் கையிலுள்ள சக்கராயுதம், 4. வட்டத்தின் சுற்றளவு

  • ஞாயிறு
  • தேராளி – தேர்ச்சக்கரங்கள்

சொல் பொருள் விளக்கம்

“பெரிது பெரிது புவனம் பெரிது” என்பது எவரும் அறிந்தது. அப்பெரிய புவியும் கதிரோனை நோக்கச் சிறிய துண்டம் என்பது அறிவியல் கணிப்பு . பருதியிலிருந்து சிதறி விழுந்த துண்டுகளில் ஒன்றே புவி எனின், இத்துண்டங்கள் எல்லா வற்றையும் கொண்டிருந்ததும், இத்துண்டங்களை அகல விட்டும் மிகப் பேரண்டமாகத் திகழும் அப்பருதியாம் கதிரின் பருதியைக் கணித்தல் அரிதே. அதனைப் ‘பருதி’ என்றது எத்தகை தகவுப் பெயர்!

பரிதி, பருதியாம் வடிவால் ‘சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி’ எனத் தேராளியைக் குறிக்கிறது பதிற்றுப் பத்து (46.8). பருதி ஞாயிறு என்பது பருதிப் பொருள் வெளிப்படத் தெளிவிக்கும் (பெருங்கதை).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sun, wheel of a chariot or car, the discus in Lord Vishnu’s hand, the circumference of a circle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 2,3

பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,

சுரம் பல கடவும் கரை வாய் பருதி – பதி 46/8

பாலை வழிகள் பலவற்றைக் கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள்

பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பெரு விறல் மள்ள – பரி 3/89,90

சக்கரத்தை வலக்கையில் ஏந்தியிருப்பவனே! மற்போரில் ஆற்றலுள்ள மல்லனே! திருமகளின் கணவனே! பேராற்றல் கொண்ட மள்ளனே!

புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/10-12

புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி, தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின் சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *