சொல் பொருள்
(வி) 1. பரவு, 2. பரப்பப்படு, 3. பரப்பு, 4. தாவு, குதி, 5. தாவி ஓடு, 6. மேலிருந்து குதி, 7. நீர் முதலியன வேகமாய்ச் செல், 8. தாக்கு, 9. வெட்டு, 10. முட்டு, 11. பட்டு உள்ளேசெல், 12. தாக்கி மோது
2. (பெ) 1. பாய்தல், 2. காற்றின் விசை கப்பலைச் செலுத்தும் வகையில் கட்டப்படும் உறுதியான துணி, 3. கோரைப்புல், ஓலை முதலியவற்றால் முடைந்த விரிப்பு
சொல் பொருள் விளக்கம்
1. பரவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread, extend as light darkness etc., get spread, spread, lay out, jump, spring, gallop, jump down, dive, flow, rush, gush out, attack, cut, butt, strike, pierce, charge, pounce upon, leaping, sail, mat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 1,2 அகன்ற பெரிய வானில் பரவிக்கிடந்த இருளை விழுங்கி, பகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறு பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267 (படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில் மை பட்டு அன்ன மா முக முசுகலை பைது அறு நெடும் கழை பாய்தலின் – அகம் 267/9,10 மை பூசினாலொத்த கரிய முகத்தினையுடைய ஆண்குரங்கு பசுமை அற்ற நீண்ட மூங்கிலின்மேல் தாவுதலினால் துணை புணர் அன்ன தூ நிற தூவி இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133 தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால் இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 689 பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும் கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும் – பதி 86/9-11 ஓடக்கோல் ஊன்ற முடியாத அளவுக்கு ஆழமானது என்றாலும், அந்த நீரில் பாய்ந்து மகளிர் நீர்விளையாட்டு ஆட, அவர் காதிலிருந்தி விழுந்த பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும் பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி – கலி 34/2 பெரும் வெள்ளமாய்ப் பாய்கின்ற நீரை எங்கும் பரப்பி உயிர்களை வாழச்செய்து, குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9 குறுந்தடி தாக்கும் முரசினது ஒலிக்கும் அருவி எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து பிடி கணம் மறந்த வேழம் – முல் 68,69 ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப் பிடித் திரளை மறந்த வேழத்தையும்; வேழத்தின் கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/11-13 காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும், நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6 மாற்றார் எறிந்த நெடிய வேல் வந்து பட்டு ஊடுறுவியதால் நாணம் உண்டாகிய நெஞ்சுடனே கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 307-310 கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை, வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால், ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு, உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்; பாய் கொள்பு உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை – அகம் 329/9,10 பாய்தல் கொண்டு நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக்குட்டி மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது புகாஅர் புகுந்த பெரும்கலம் – புறம் 30/12,13 மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம் – புறம் 246/9,10 பருக்கைக்கற்களால் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயும் இன்றிக் கிடக்கும் கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்