Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. கண்களால் நோக்கு, 2. கவனி, உற்று நோக்கு, 3. எதிர்பார், 4. பரிவுடன் நோக்கு

2. (பெ) 1. உலகம், பூமி, 2. கடினமான நிலம், 3. பாறை, 4. வண்டியின் அடிப்பாகத்திலுள்ள நெடும் சட்டம்

சொல் பொருள் விளக்கம்

1. கண்களால் நோக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

see, watch, observe, look for, expect, look with compassion, world, earth, hard soil, rock, rocky layer, long bar of the body of a cart

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன – பரி 12/57-60

அமிழ்தத்தைப் போன்ற இனிய பார்வையால் பெண் ஒருத்தி (தன் கணவனை)நோக்க,
மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
“தவறிழைத்தாய்” என்று சொல்ல

வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643

வலிய களிற்றை (இரைகொள்ளக் கவனித்து)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 431-435

பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல –
கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரத்தை எதிர்பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;

குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி – கலி 99/4,5

குழந்தையைப் பரிவுடன் நோக்கி அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை

பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2

பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இவ் உலகத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்

பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு – நற் 24/1

நிலம் பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும்

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 45,46

பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்

எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48

(இரண்டு)கணைய மரங்களையும் சேர்த்தாற் போன்ற பருத்த கைகளையுடைய, வலிய, கோக்கும் சட்டத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *