சொல் பொருள்
(பெ) 1. யானையின் துணைதேடும் காலத்து வெறி, 2. வலிமை, 3. செருக்கு, இறுமாப்பு, 4. வெறி, 5. கஸ்தூரி,
சொல் பொருள் விளக்கம்
யானையின் துணைதேடும் காலத்து வெறி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rut of an elephant, a state or period of heightened sexual arousal and activity, strength, valour, pride, arrogance, frenzy, madness, musk, An odorous glandular secretion from the male musk deer; used as a perfume fixative
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போல பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136 காமம் காமம் என்று உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம் வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி மிகுவதும் குறைவதும் அன்று; யானை தழையுணவை மிகுதியாக உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல அது வெளிப்படும் தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால். மதம் தபு ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 42,43 வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும், சோர்வடைந்த தன்மையினால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும், தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/8-11 இனிய சுவையுள்ள சுனைநீரின் மலர்களைக் கண்ணியாகச் செய்து சூடி, இறுமாப்புடன் செருக்கி, தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து, மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே! பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி ஆம்பல் மெல் அடை கிழிய குவளை கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறு இடு கத சே போல மதம் மிக்கு நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் ;36/1-7 பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன் வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி, ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின் மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து, பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி, தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல், கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து, காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே! அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44 மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய் உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்