Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குடிப்பிறப்பு, வமிசம், 2. பாரம்பரியம், 3. முறை, நியதி,  4. இயல்பு, தன்மை, 5. மேம்பாடு, மேன்மை, பெருமை, 6. பண்பு, 

சொல் பொருள் விளக்கம்

குடிப்பிறப்பு, வமிசம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ancestral line, lineage, Rule, law; established usage or order; that which is sanctioned by custom, nature, property, greatness, ideal, characteristic

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் இய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக – சிறு 125-129

பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்குரிய முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக

தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 66,67

தமிழ் வீற்றிருந்த பொறுத்தற்கரிய பாரம்பரியத்தையுடைய
மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரையும் சிறிதாயிருக்கும்

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி – சிறு 227-230

அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி,

பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58

பகைவர் இவர், நண்பர் இவர் என்னும்
வேறுபாடு உண்டோ, உன் இயல்பினை அறிவோர்க்கு?

நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையதோர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5-7

நினைக்கும்போது வியப்பாய் உள்ளது
எவ்வளவோ பெரிய தலைமையோடு கூடியும் சோழன் அச் சிறப்புகளை எல்லாம் கைவிட்டு இவ்விடம் வருதல்,
ஆனால் அதனினும் வியப்பளிக்கிறது, வேற்று நாட்டில் வாழும்
புகழ்பெற்ற சான்றோன் –
புகழ் மேம்பாடாக, நட்பே பற்றுக்கோடாக – இவ்விரண்டையும் பெரிதாக எண்ணி
இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக் காலத்து இவ்விடத்து வருதல்

வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/69-71

தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத பண்பும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத பண்பினையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *