சொல் பொருள்
(பெ) 1. பக்கம், 2. விலாப்பாகம், 3. இடை, இடுப்பு, 4. குலம், 5. நூல், 6. இருந்த இடம், சுவடு, தடம், 7. இடம், 8. எல்லை, 9. செல்வம்,
சொல் பொருள் விளக்கம்
பக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
side, Side of the body, waist, Race, tribe, family, science, treatise, trace, land, place, limit, wealth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7 பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும், பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/6,7 பெரிய கடற் பரப்பில் அமர்ந்திருக்கும் தெய்வமகளோ? கரிய கழியின் பக்கத்தே நிலைகொண்டு உறைபவளோ? தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142 கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய விலாப்பக்கத்தினையும் சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214 இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன், சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275 சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 13-18 முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த) நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்; (ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால், கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல், குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்; அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 269-271 அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும், பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் – இருந்த சுவடே இல்லையாகும்படி, மலைகளையெல்லாம் மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான், அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215 அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம் வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து, இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561 இழை நுழைந்தஇடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4 நான் துயரத்தோடு இருந்த நிலையை என் அன்னை அறிந்தவள் போல நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17 நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி, செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395 போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி, கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில் முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் – புறம் 391/11 இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்