முஞ்ஞை என்பது சிறிய மரம் அல்லது புதர்ச்செடி ஆகும்.
1. சொல் பொருள்
முஞ்ஞை, முன்னை, மின்னை, பசுமுன்னை, முன்னைக் கீரை
2. சொல் பொருள் விளக்கம்
முஞ்ஞை என்பது ஒரு புதர்ச்செடி. இது இப்போது முன்னை, பசுமுன்னை என்று அழைக்கப்படும். இது Lamiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும் இது 8 மீட்டர் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும் அல்லது புதர் ஆகும்.
முசுண்டைக் கொடியும் இதனிற் படரும். அதனால் இது நல்ல நிழல் தரும்.
இதனடியில் பலர் சேர்ந்து துயிலுதற்கும் உதவும்: இதன் இலைகள் சிறியன; ஒருவகையான நறுமணம் தருவன: இலைகளை ஆடும், முயலும் தின்பதுண்டு: ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு.
இலை நுனி கூரியது, பளபளப்பானது, பசியது. இலையில் நுண்மயிர் இருக்கும். காய்ந்த இலை கறுப்பு அல்லது நீல நிறமாக இருக்கும். இதன் மலர்கள் பசுமை கலந்த வெண்மை நிறமானது.
மொழிபெயர்ப்புகள்
headache tree, spinous fire brand teak • Bengali: ganiari • Gujarati: મોટી અરણી moti arani • Hindi: अरणी arani • Kannada: ಅಗ್ನಿಮನ್ಥ agnimantha • Malayalam: appel • Marathi: अरणि arani, रानटाकळी ranatakali • Sanskrit: अग्निमन्थ agni-mantha, अरणि arani • Tamil: பசுமுன்னை pacu-munnai, முன்னை munnai • Telugu: భైరవి bhairavi
3. ஆங்கிலம்
firebrand teak, Premna mollissima, the dusky fire brand mark, premna latifolia, Roxb.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு புன் புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/10-12 இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து, ஆட்டுக்குட்டி தின்ன ஒழிந்து நின்ற குறிய நாற்றத்தையுடைய முஞ்ஞையது கொழுவிய கணுவில் கிளைக்கப்பட்ட குறிய இலையை புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை முயல் வந்து கறிக்கும் முன்றில் – புறம் 328/14,15 தாளி மரத்தின் அடியில் நீண்டு வளர்ந்திருக்கும் சிறிய நறிய முன்னை மரத்தை குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி பந்தர் வேண்டா பலா தூங்கு நீழல் – புறம் 320/1,2 முற்றத்திலுள்ள முன்னை மரத்தோடு முசுண்டைக் கொடியும் செறிந்திருத்தலால் வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தலாய்ப் பலவின் கனி தொங்கும் நீழலில்
முல்லை தலை அணிந்த முஞ்ஞை வேலி - வத்தவ:2/63 இது ஒரு கொடிவகை என்பர் ஔவை.சு.து. அவர்கள் தம் உரையில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்