Skip to content

முதுவெள்ளிலை

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககாலத்துத் துறைமுகப்பட்டினம்

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககாலத்துத் துறைமுகப்பட்டினம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a port city during sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து
நிலவு கானல் முழவு தாழை
குளிர் பொதும்பர் நளி தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
வியன் மேவல் விழு செல்வத்து
இரு வகையான் இசை சான்ற
சிறு குடி பெரும் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 106-124

பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
மிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும், 110
பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக் கொண்ட
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும், 115
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) – புகழப்படுகின்ற
மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய, 120
(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த
சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
பழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி
பெற்றதை முதுவெள்ளிலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்வூரில் மீன் நிற்கும் கோள்நிலை மாறினும் மழை பொழிந்து வெள்ளம் வரும்.
நெல் அறுப்போர் அறுவடைப் பாட்டோடு புள்ளினங்களின் பாட்டும் சேர்ந்து ஒலிக்கும்.
இவ்வூர் மக்கள் கடலில் மீன் பிடிக்கத் திமிலில் செல்வார்கள். உப்புக் காய்ச்சுவார்கள்.
எனவே, இது ஒரு பாண்டியநாட்டுத் துறைமுகப் பட்டினம் என்பது பெறப்படும்.
இது இன்றைய தூத்துக்குடி என்று சொல்வர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *