Skip to content
முந்நீர்

முந்நீர் என்பது கடல்

1. சொல் பொருள்

(பெ) 1. ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது, கடல், 2. மூன்று வகை நீரால் கலந்து செய்யப்படும் ஓர் கலவை, 3. முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்று, 4. பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது,

2. சொல் பொருள் விளக்கம்

கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது 

இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; – புறநானூறு 24

முந்நீர்
முந்நீர்

மூன்று வகையான பருகும் நீரை ஒன்றாகக் கலந்து உண்ணும் பழக்கம் சங்ககாலத் தமிழக மக்களிடையே இருந்து வந்தது. இந்தக் கலவை நீரை முந்நீர் என்றனர்.

எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! (புறநானூறு 9)

முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்று. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இந்த விழாவைக் கொண்டாடினான். அப்போது அவன் ‘செம்பொன்’ செல்வத்தை யாழிசைப் பாணர்களுக்கு வாரி வழங்கினான்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Sea, as consisting of three waters, viz., river water, spring water and rain water.

Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth

கடல்
முந்நீர்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை – பொருள். அகத்:34/1

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293

இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்

வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 75,76

வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று தன்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,

முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 30

கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய் (அமைய), அக் கடலின்

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் – பெரும் 441

கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே

முந்நீர்
முந்நீர்

ஒலி முந்நீர் வரம்பு ஆக – மது 2

முழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு,

வான் இயைந்த இரு முந்நீர்/பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 75,76

வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடை

கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்/திரை இடு மணலினும் பலரே உரை செல – மது 235,236

கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய பெரிய கடலின்

மா கால் எடுத்த முந்நீர் போல – மது 361

பெருமையையுடைய காற்று எடுத்த கடலொலி போல

கரை பொருது இரங்கும் முந்நீர் போல – மது 425

கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல,

முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – மது 768

கடல் நடுவே ஞாயிறு போன்றும்

முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி – நற் 283/6

கடலின் மேல் பலரும் தொழும்படியாகத் தோன்றி,

முந்நீர்
முந்நீர்

விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் – குறு 130/2

குறுக்கிடும் பெரிய கடலில் காலால் நடந்து செல்லார்;

இரு முந்நீர் துருத்தியுள் – பதி 20/2

கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த

வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து – பதி 31/21

வெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில்

கொள குறைபடாமையின் முந்நீர் அனையை – பதி 90/16

இரவலர் எடுத்துக்கொள்ள குறைவுபடாதிருப்பதால் கடலைப் போன்றிருக்கிறாய்;

திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர்/வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/6,7

அழகிய நீலமணி, அலைகளின் ஓசை அடங்கிய கடல்,

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70

ஒளி திகழும் பாற்கடலைக் கடைந்த பொழுது, மந்திரமலையைப்

இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94

பெரிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் தேடினால் என்ன பயன்? அதுதான் இந்த ஊருக்கு

நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/6

நீண்ட பெரிய கடலில் பெருங்காற்று மரக்கலத்தைத் தாக்கும்போது

மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம் – கலி 103/77

குற்றமற்ற அழகிய கடலில் பரந்துகிடக்கின்ற இந்தத் தொன்மையான நிலத்தை

பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/17

பொங்கிவரும் பெரிய கடற்பரப்பைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்க்கின்ற நிலையில்

பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/46

பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி

திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/28

அலைகளைக் கொணரும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகம் எங்கும் சென்று

முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா – அகம் 104/5

கடல்சூழ்ந்த உலகமே அதன் ஓட்டத்திற்கு ஆற்றாத

முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/4

தனது மரக்கலத்தைக் கடலில் செலுத்தி, பகைவரின் காவல்மரமாகிய கடம்பமரத்தை வெட்டி, இமயமலையில்

அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் – அகம் 207/1

தெய்வத்தன்மை உடைய கடலின் நீர் வந்து பரவிய உப்பு விளையும் வயலில்

செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி – அகம் 212/18

போர்புரியும் வலிமையால் கடலை வளைத்து

முழங்கு இரு முந்நீர் திரையினும் பலவே – அகம் 338/21

முழங்குகின்ற பெரிய கடலின் அலைகளிலும் பலவாக

விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/6

விரிந்த அலைகளையுடைய கடலும், மண் திணிந்த இந்த உலகமும் ஆகிய இவையெல்லாம்

பாடு எழுந்து இரங்கு முந்நீர்/நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/25,26

ஆரவாரம் மிகுந்து முழங்கும் கடலையும்,

முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/10

முந்நீராகிய கடலின் தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின்

களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் – புறம் 13/5

அந்தக் களிறோ, கடலில் செல்லும் கப்பலைப் போலவும்,

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ – புறம் 18/1

முழங்குகின்ற கடலால் முழுவதும் சூழப்பட்டு

இரு முந்நீர் குட்டமும் – புறம் 20/1

பெரிய கடலின் ஆழமும்

மு நீர் உண்டு முந்நீர் பாயும் – புறம் 24/16

இந்த மூன்று நீரையும் குடித்து கடலுக்குள் பாய்ந்து விளையாடும்

நளி இரு முந்நீர் ஏணி ஆக – புறம் 35/1

நீர் செறிந்த பெரிய கடலே எல்லையாக

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல – புறம் 60/1

கடலின் நடுவே இருக்கும் தோணியில் இடப்பட்ட விளக்கின் சுடரைப் போல

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – புறம் 66/1

நீர் செறிந்த பெரிய கடலில் கப்பல்களை ஓட்டி

முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/2

கடலாகிய எல்லையையும் உடைய வெற்றி பொருந்திய மூவேந்தரைப்

திரை பொரு முந்நீர் கரை நணி செலினும் – புறம் 154/1

அலைகள் வந்து மோதும் கடலின் கரையை ஒட்டிச் சென்றாலும்

கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர் – புறம் 303/7

கரையை மோதும் கடலைப் பிளந்து செல்லும் படகைப் போல் பகைவர் படையைப் பிளந்து, அவர்களுடைய

முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே – புறம் 363/18

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தை முழுவதுமாகத் துறந்து.

நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/17

உன்னுடையது, அனைவரும் அறிய, கடல் சூழ்ந்த இந்தப் பரந்த உலகம்;

கடல்
கடல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *