முளவு என்பது முள்ளம்பன்றி
1. சொல் பொருள்
(பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான்
பார்க்க முளவுமா, முளவுமான், எய்
2. சொல் பொருள் விளக்கம்
முள்ளம்பன்றி,
மூளவுமா , முளவுமான் என்ற பெயர்கள் சங்க நூல்களில் முள்ளம் பன்றியைக் குறித்து வழங்கும் பெயர்களாகும் . இந்த விலங்கு காட்டுப் பன்றியை உருவிலும் தோற்றத்திலும் ஓரளவு ஒத்திருப்பதால் முள்ளம் பன்றி என்று தற்காலத்தில் அழைக்கின்றனர் . ஆனால் பன்றியினத்திற்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. ஆதலின் முள்ளம் பன்றி என்ற பெயரைவிட விலங்கு நூலில் முளவுமா என்ற சங்கப் பெயரைப் பயன்படுத்துவது நன்று . முள்ளையுடைய விலங்கு முளவுமா என்றழைக்கப்பட்டது .
எய் என்றும் , எய்மான் என்றும் சங்க நூல்களில் அழைக்கப்படும் . முள்ளம் பன்றியின் மேற்புறத்தில் கழுத்திலிருந்து தொடங்கி நீண்ட முட்கள் உள்ளன. இதை எய்ம்முள் என்று சங்க நூல்களில் அழைப்பர் . நீண்ட கோலின் நுனியில் இரும்பு முள்ளைச் செருகி எறிவதற்காகப் பயன்படும் ஊசியை எறியூசி என்பர் . இந்த எறியூசியை எய் என்றும் அழைப்பர் . இந்த எறியூசி போன்ற எய்களை உடலில் நிறைய உடையதால் எய்மான் என்றழைக்கப்பட்டது . முள்ளம்பன்றி தன் உடலில் உள்ள முள்ளை எதிரிகள் மேல் எறிவதாக ஒரு நம்பிக்கையுண்டு. இத்தகைய நம்பிக்கை மிகப் பழங்காலத்தில் இருந்திருக்கலாம் . இன்றும் இந்தியா முழுமையும் தமிழ் நாட்டிலும் இந்த நம்பிக்கை நாட்டு மக்களிடையே நிலவுகின்றது . இந்த நம்பிக்கையின் அடிப்படையாகவே எய்யும் விலங்கு என்ற பொருளில் எய், எய்மான் என்ற பெயர்கள் எழுந்தன வென்று தெரிகின்றது.
” மொய்த்த முட்டன துடற்றலை துளைப்ப முடுகிக்
கைத்த லத்தினிமி ரக்கடிது கன்றிவிசிறும்
மெய்த்த மெய்ப்பெரிய கேழலென … -சம்பராமாயணம் , விராதன் , 33.
மெய்யுருவி வையுறு முனை முள்ளை
யெய்யுதறின . – சீகாளத்திப் புரானம் , 86 .
கம்பராமாயணம் முதலிய பிற்கால நூல்களில் எய்மா தன் உடலில் உள்ள கூரிய முள்ளை உதறினதாகவும் விசிறினதாகவும் கூறியிருப்பதைக் காணலாம் . ஆனால் முள்ளம் பன்றி தன் உடலில் உள்ள முள்ளை உதறுவதோ , விசிறுவதோ, எய்வதோ இயற்கையில் நடப்பதன்று என்பதை விலங்கு நூலார் கண்டுள்ளனர் . முள்ளம்பன்றியின் முள் பிற விலங்குகளின் உடலில் குத்தினால் அதை எடுப்பது எளிதன்று . அதனால் முள் முள்ளம் பன்றியின் உடலிலிருந்து பிய்க்கப்பட்டு விடும் , உடைந்து விடும் இந்த நிகழ்ச்சியைக் கண்டே முள்ளம்பன்றி முள்ளை எறிவதாகவும் எய்வதாகவும் கொண்டனர் . சங்க இலக்கியத்தில் இந்த நம்பிக்கையைப் பற்றி யாதொரு குறிப்பும் காணப்படவில்லை . மலைபடுகடாத்தில் முள்ளம் பன்றியின் முள்ளால் தாக்கப்பட்ட கானவனைப் பற்றிய செய்தி வருகின்றது .
சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி
னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை – மலைபடுகடாம் , 300 – 301 .
எஃகு போன்ற முள்ளினால் எய்ம்மா கானவனைத் தெறுவதாகவே கூறுகின்றதே யொழிய முள்ளை எய்ததாகக் கூறவில்லை . முள்ளம் பன்றி தன்னுடைய எதிரிகளை வெகுவிரைவாகப் பின்னோக்கி ஓடித் தாக்கும் . அப்போது முள்ளம் பன்றியின் பின்னோக்கின முட்கள் எதிரியைத் தாக்கித் துளைக்கும் . ஒடிந்த முள் எதிரிகளின் உடலில் பதிந்து மிகுந்து வலி தரும் . முள்ளம் பன்றியின் முட்களால் தாக்கப்பட்டு இறந்து போன சிறுத்தைப் புலியையும் வரிப்புலியையும் பற்றி விலங்கு நூலார் எழுதியுள்ளனர் . நீர் அருந்தும் துறையில் சிறுத்தைப் புலியுடன் போரிட்ட முள்ளம் பன்றியின் வீரத்தைப் பற்றி ஒரு வேட்டையாளர் எழுதியிருக்கின்றார் . முள்ளம் பன்றியின் கழுத்தில் அடர்த்தியாக மென்மையான முட்கள் காணப்படும் . இந்த முட்களைப் பன்றியின் கழுத்தில் உள்ள கற்றை மயிர்களுடன் ஒப்பிட்டு “ எய்ம்முள் அன்ன பரூஉமயிர்
எருத்தின் ” பன்றியென நற்றிணை ( 98 ) கூறுகின்றது . ( Its neck and shoulders are crowned with a crest of bristles
of 6 to 12 inch long . The quills on the back are very profuse ) முள்ளம் பன்றியின் முள் அதன் மயிரின் மறு
உருவமே யாகும் என்று விலங்கு நூல் கூறும் . முள்ளம் பன்றியின் முட்கள் மிகவும் கூரியவை . உடலில் தைத்தால் எடுப்பது எளிதன்று . மிக்க வலியைத்தரும் . எய்தெற வருந்திய கானவ ரழுகையை மலைபடுகடாம் கூறியுள்ளது . முள்ளம் பன்றியின் முட்களைக் குறுகிய ஈச்ச மரத்தின் கூரிய முள்ளுடைய இலை வேய்ந்த குடிசையின் தோற்றத்திற்கு ஒப்பிட்டுப் பெரும்பாணாற்றுப்படை கூறியுள்ளது .
ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி – பெரும்பாண் . 88 – 89 ,
எய்ப்புறம் குடிசையில் வேய்ந்த காட்டீச்ச இலைகள் போல இருந்ததாகக் கூறியது அழகிய உவமையாகும் . இந்த ஒப்புமையைக் கண்டே ஆங்கிலத்தில் குற்றீச்ச மரத்திற்கு ( Phoenix humilis ) Porcupine Wood என்ற பெயர் கொடுத்தனர் . முள்ளம்பன்றி மரம் என்ற பெயர் சங்க இலக்கிய உவமையுடன் எவ்வளவு ஒத்து வருகின்றது.
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தானென் னேறு -பு . வெ , மாலை- வாகைப் . 22
அம்புகள் உடல் முழுவதும் தைப்பக் கிடந்த வீரன் முள்ளம்பன்றி போல இருந்ததாகக் கூறப்பட்டுள்ள உவமை எண்ணி மகிழத்தக்கது . கணை என்ற சொல் தமிழில் அம்பு என்ற பொருளுடையது . துளு மொழியில் கணை முள்ளம்பன்றி முள்ளைக் குறித்து வழங்குவதை இது சார்பாகக் கவனிக்கத்தக்கது. முள்ளம்பன்றி பகற்காலத்தில் குகையிலோ , முழையிலோ தூங்கும் . கரடுமுரடான பாறை நிலங்களில் குன்றுச் சாரல்களில் வாழும் . சேபளைப் பள்ளியில் வாழ்வதாக மலைபடுகடாம் ( வரி 300 ) கூறுவதைக் காணலாம் . நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார் . முள்ளம் பன்றி இரவிலே உணவு தேட வெளிவரும் . சங்க நூல்களிலும் முள்ளம்பன்றி இரவுக் காலத்தில் காணப்பட்டதைப் பற்றிய செய்திகள் வருகின்றன .
” இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குறும்பி தேரும் ” – அகம் , 307 .
இராக்காலத்தில் யானையும் கரடியும் முள்ளம்பன்றியும் காட்டுவழியில் காணப்படும் என்று அகநானூறு கூறுவதை நோக்கவும் . இரவுக் காலத்தில் முள்ளம் பன்றியை வேட்டையாடியதைப்பற்றி நற்றிணை 285 ஆம் பாடலும் குறிப்பிட்டுள்ளது . முள்ளம்பன்றியின் இறைச்சியை மிகச் சுவையுடைய இறைச்சியாகச் சங்க காலத்தில் கருதினரென்று தெரிகின்றது . இன்றும் காட்டுப்பன் றியின் இறைச்சியையும் முள்ளம்பன்றியின் தசையையும் சுவையுடையதென விரும்பி உண்ணுகின்றனர்
மான்கள் மகளிர்க் கான்றோ ரகன் துறைச்
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர் முகை யடுக்கத்துச் சினை முதிர் சாந்தம் -புறம் , 374 .
” முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலைபடுகடாம் , வரி. 176 – 177 .
பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட்
டெயினர் தந்த வெய்ம்மா னெறி தசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய – புறம் , 177
……… சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்து கொடு
காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் – நற்றிணை , 85 .
இரவில் வருதல் அன்றியும் உரவுக்கணை
வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட – நற்றிணை , 285
ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
முளவு மாத் தொலைச்சும் குன்ற நாட -அகம் , 182 ,
முளவுமாத் தொகைச்சிய முழுச்சொ லாடவர் -புறம் , 325
முளவுமா வல்சி யெயினர் தங்கை- ஐங்குறு நூறு . 364
முள்ளம்பன்றியை வேட்டையாடுவதில் சங்ககாலத்தில் ஆடவர் விருப்பமுடையவராக இருந்தனர் என்பது தெரிகின்றது . முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர் என்று புறநானூறு கூறுகின்றது .எயினர் முள்ளம் பன்றியை விரும்பிக் கொன்று அதன் வெட்டின தசையை அரசர்க்குக் காணிக்கையாகக் கொடுத்தனர் . கானவன் முள்ளம்பன்றியைச் சாரலில் { hillsides ) கொன்றதாகவும் நீர்த்துறையில் கொன்றதாகவும் கூறியுள்ள செய்திகள் உண்மையானவையே .
புறநானூற்றுப் பாடல் (374 ) வரிக்கு உரை கூறியவர் நீர்த்துறைக் கண்ணிருந்த முள்ளம்பன்றியை வேட்டஞ் செய்தல் வேட்டுவர் மரபு என்று கூறியிருப்பதைக் காண்க . முள்ளம்பன்றியை வேட்டையாடிய முறையைப் பற்றியும் சங்க நூல்கள் கூறுகின்றன . இரவில் வேட்டையாடும்போது மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களைப் பயன்படுத்தினர் . நாய்களுடன் வந்த குறவன் காட்ட மலைமல்லிகைப் புதரில் இருந்த முள்ளம்பன்றியைக் குன்ற நாடன் கொன்றதாக அகநானூறு ( 182) கூறுவதைக் கவனிக்க வேண்டும் . நெஞ்சிலே அம்பைப் பாய்ச்சிக் கொன்று வீட்டிற்குக் கொண்டுவந்த முள்ளம்பன்றியைக் கண்டு வீட்டு நாய்கள் குதித்ததாக நற்றிணை கூறுவதைக் காணலாம் . முள்ளம்பன்றியை நாய்களை வைத்து வேட்டையாடுதலே இன்றும் வழக்கமாகும் . முள்ளம்பன்றியின் இறைச்சி மிகவும் கொழுப்பை யுடையது . இதன் தசையைப் பிளந்து பகிர்ந்து கொள்வர் . பைஞ்ஞிணம் பெருத்த வென்றும் பைந்நிணப் பிளவை என்றும் கூறப்பட்டுள்ளது . இதன் நெய்யுடைய கொழுப்புத் தசையைச் சோற்றுடன் சேர்த்துப் புழுக்கி உண்டன ரென்று புறநானூறு 177 ஆம் பாடலும் சிந்தாமணி 1233 ஆம் பாடலும்கூறுகின்றன . முள்ளம்பன்றி நிகண்டுகளில் முட்பன்றி ,முண்மா என்று அழைக்கப்பட்டுள்ளது . சல்லியம் பெயர் வடமொழியிலிருந்து வந்தது . முள்ளம் பன்றியை விலங்குநூலார் Hystrix Indica என்றழைப்பர் .
முள்ளம்பன்றியைப் போல் மற்றொரு சிறிய விலங்கையும் தமிழ்நாட்டில் காண்கின்றோம். இதை மருட்டுப்பன்றி ( Hedge hog ) என்பர் . இது முள்ளம்பன்றி இனத்தைச் சேர்ந்ததன்று . பூச்சித் தின்னிகளில் ( Insectivores ) ஒன்று . மூஞ்சூறும் இந்த இனத்தைச் சேர்ந்தது . இதற்குக் குறுகிய சிறிய முட்கள் உண்டு . பந்துபோல் சுருட்டிக் கொள்ளும் . நிகண்டுகளில் இதைக் கிருட்டி , கோலம் , கிரிகிரி என்றழைக்கின்றனர் . பயமுறுத்துவதற்காக இதன் முட்கள் இருப்பதால் பந்துபோல சுருட்டி மருட்டுவதால் கிரிகிரி என்றனர். கிரிகிரி செய்தல் என்ற பேச்சு வழக்கு இதிலிருந்து தோன்றிற்று .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Porcupine, Hystrix leucura, Hystrix Indica, Indian crested porcupine
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முளவுமா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
கானவன் எய்த முளவுமான் கொழும் குறை – நற் 85/8
உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு – நற் 285/4
முளவுமா தொலைச்சும் குன்ற நாட – அகம் 182/8
முளவுமா தொலைச்சிய முழுசொல் ஆடவர் – புறம் 325/6
சிலை-பால் பட்ட முளவுமான் கொழும் குறை – புறம் 374/11
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்