Skip to content

சொல் பொருள்

பெ) தெலுங்கர்

சொல் பொருள் விளக்கம்

தெலுங்கர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

People of the Telugu country

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்த வடுகர் யார் என்பது பற்றியும், அவரது வாழ்வுமுறை பற்றியும் சங்க இலக்கியங்கள் விரிவாகக்
கூறுகின்றன.

இந்த வடுகர் வேங்கட மலைக்கும் வடக்கில் உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும்
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது
அகறல் ஆய்ந்தனர் – அகம் 213/3-11

உயர்ந்து தோன்றும் வெள்ளிய அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பாலுள்ளதும்
கொய்யப்பெற்ற தழைகளையுடைய காட்டு மல்லிகையின் வைகறையில் அலரும் பூவினை
சுருண்ட கரிய மயிரில் வண்டு மொய்க்கச் சூடி
பகைவர் போர்முனையில் வென்றுகொண்ட ஏறுகளையுடைய பெரிய ஆனிரைக்காக
முதிர்ந்த கள்ளாகிய நறவினை விடியற்காலத்தே பலியாகச் செலுத்தும்
வெள்ளிய நிணச் சோற்றினையுடைய வடுகரது தேயத்தேயுள்ள
நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தையுடைய
தீயின் வெப்பம் விளங்கும் அரிய காடுகள் நீண்டன என்று கருதாமல்
நம்மைப் பிரிந்துபோகத் துணிந்தனர்

இவர்கள் வேட்டைநாயுடன் இருப்பர்

கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி – நற் 212/5-7

கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
நீண்ட பெரிய குன்றுகளைக் கடந்து நம்மிடம்
வந்துசேர்ந்தார், வாழ்க, தோழியே!

கல்லா நீள்மொழி கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி – அகம் 107/11,12

கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகரது
வலிய ஆண்மை விளங்கும் அரிய போர்முனையாகிய சுரத்தினைக் கடந்து சென்று

இவர்கள் வேறு மொழி பேசுபவர்கள்.

குல்லை கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/5-7

கஞ்சங்குல்லையைக் கண்ணியாக அணிந்த வடுகரின் இடத்ததாகிய
வலிய வேலையுடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கும் அப்பால்
மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவராயினும்

இவர்கள் நாடு எருமை நாடு எனப்படும். எருமை என்பான் இவர்களின் தலைவன்.

கணம் சால் கோவலர் ————- ————–
——————- —————————
துறு காழ் வல்சியர் தொழுவறை வௌவி
கன்றுடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர்பெருமகன்
பேர் இசை எருமை நன்னாட்டு உள்ளதை
அயிரியாறு இறந்தனராயினும் – அகம் 253/12-20

கூட்டம் மிக்க கோவலரான —————– —
—————— – —————————-
செறிவு மிக்க உணவினரின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்தும்
கன்றுகளையுடைய ஆனிரையை மன்றுகள்நிறையுமாறு கொணரும்
ஒப்பில்லாத வலிய தோளினையுடைய வடுகர் தலைவனாகிய
பெரிய புகழினையுடைய எருமை என்பானது நல்ல நாட்டின்கண் உள்ளதாகிய
அயிரி என்னும் ஆற்றினைக் கடந்து சென்றனராயினும்

மோரியர் தமிழ்நாட்டின் மீதுபடையெடுத்துவந்த போது அவர்களை இவர்கள் அழைத்துவந்தனர்.

ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/4-12

நுடங்கும் தன்மையுடைய இளமை பொருந்திய மயில் கழித்த தோகையை
நீண்ட வாரினால் வலிய வில்லில்வைத்துக் கட்டி, அந்த வலிய வில்லின்
அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத்தன்மையுடைய
மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்த செலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய
மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் என்பார்
தென்றிசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு
வான் அளாய உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை
தமது ஒள்ளிய கதிர்களையுடைய ஆழி தடையின்றிச் செல்ல போழ்ந்து வழியாக்கிய
பாறைகளைக் கடந்து அவர் சென்றார்

இவர்கள் கள் குடிப்பதில் விருப்பமுடையவர்கள்.

நோன் சிலை
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர்
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனராயினும் – அகம் 295/14-17

வலிய வில்லில்
தொடுத்தல் அமைந்த அம்புகளின் செறிவினையுடைய வடுகர்
கள்ளினைஉண்ட மகிழ்ச்சியுடையராய் செருக்கு மிக்கு ஆரவாரிக்கும்
வேற்றுமொழி வழங்கும் தேயத்தைக் கடந்து சென்றுளாராயினும்

இவர்கள் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தபோது சோழமன்னன் இவர்களை முறியடித்தான்.

சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி
—————————— ——————————-
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/10-14

சோழர் பெருமானாகிய
என்றும் விளங்கும் புகழினை நிலைநாட்டிய இளம்பெரும் சென்னி என்பான்
———————– —————————
செம்பினை ஒத்த மதிலையுடைய பாழி என்னும் அரணை அழித்து
புதிய வடுகரது பசிய தலையைத் தறித்து

இவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் குடில்களைக் கன்றின் தோல்கொண்டு வேய்ந்திருப்பார்கள்

கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7

கன்றின் தோலால் ஆன கூட்டினையும் சினம் பொருந்திய நாயினையுமுடைய வடுகர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *