சொல் பொருள்
(வி) 1. வளை, 2. பணி, 3. மரியாதையுடன் கைகூப்பு, 4. வழிபடு, தொழு,
சொல் பொருள் விளக்கம்
வளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend, be submissive, salute respectfully, worship, pray
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22 அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய; வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/20 நட்பமைந்த சான்றோர்க்குப் பணிந்தொழுகும் மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையுமுடைய விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே செல்க என விடுநள்-மன்-கொல்லோ – நற் 68/1-7 விளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல் இள மங்கையர் தமது வீடுகளில் அடைத்துக்கிடத்தல் அறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்; இதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால் செல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ? முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 251,252 நின் முன் அம் முருகப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி, கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்