விசயம் என்பது கருப்பஞ்சாறு, கருப்பட்டி
1. சொல் பொருள்
(பெ) 1. கருப்பஞ்சாறு, 2. கருப்பட்டி, 3. பாகு, 4. வெற்றி, 5. பொருள், 6. வருகை
2. சொல் பொருள் விளக்கம்
கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி இறுக வைத்தால் அது வெல்லம் ஆகிறது. வேறொரு பக்குவத்தில் அது கற்கண்டு ஆகிறது. அதுவே அயிர். இந்தக் கற்கண்டை வீட்டில் நீர்சேர்த்துக் காய்ச்சினால் பாகு கிடக்கும். இதைப் பல திண்பண்டங்களுக்குப் பயன்படுத்துவர். இப்படிக் காய்சிய கற்கண்டுப் பாகும் விசயம் எனப்படுகிறது.
கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி வேறொரு பக்குவத்தில் நாட்டுச் சர்க்கரை ஆக்குவர். இது தூளாக இருக்கும். இடையிடையே கட்டிதட்டிப்போயிருக்கும். கருப்பஞ்சாற்றின் பலநிலைகளும் விசையம் எனப்படுகிறது என்று அறிகிறோம்.
விஷயம், விஜயம் என்பனவற்றின் இன்னொரு (கிரந்தக்கலப்பற்ற) வடிவம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Juice of the sugarcane, jaggery, (sugar)syrup, victory, triumph
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 260-262
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்
விசயம் கொழித்த பூழி அன்ன – மலை 444
கருப்புக்கட்டியைக் கொழித்த பொடியையொத்த
– நச்.உரை
அயிர் உருப்புஉற்ற ஆடு அமை விசயம்
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 625,626
கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)
உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 91,92
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்