Skip to content
விளம்பழம்

விளம்பழம் என்பதன் பொருள்ஒரு பழம், விளாம்பழம், விளவு

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) ஒரு பழம், விளாம்பழம், விளவு, 

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Wood-apple, Feronia elephantum, Limonia acidissima

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்

அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
'இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என
நும்மொடு வரவு தான் அயரவும்,

தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.  – நற் 12/1

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
– பல்லாண்டுகளாய்த் தொடர்ந்து வெண்ணெய் கடைந்தெடுக்கும் பானை விளாம்பழத்தின் மணம் கமழும்
என்னும் வழக்கு இன்றும் நாட்டுமக்களிடையே நிலவுகிறது. -ஔவை.சு.து.விளக்கம்

விளாம்பழத்தின் வாசனை வீசும், நிறைந்த கருப் பத்தை உடையது போல நடுவிடம் பருத்த பானையில், கயிறு தின்ற தேய்ந்த தண்டையுடைய மத்தினால் மகளிர் வெண்ணெயைக் கடைந்து எடுக்கும் தொழில் தூண் அடியில் ஒலிக்கின்ற இரவு புலர்கின்ற விடியற் காலத்தில், தன் உடம்பை மறைத்துத் தன் காலில் இருந்த பரற்கல் அமைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவாகி மாட்சிமைப் பட்ட வரிந்து புனைந்த பந்தோடு அவற்றை வைக்கும் பொருட்டுச் சென்ற உம்முடைய காதலி, ‘இவற்றைப் பார்க்குந்தோறும் வருந்துவார்களே, என் தோழிமார்! மிகவும் இரங்கத்தக் கவர்கள்’ என்று எண்ணவே, அவள் உம்மோடு வருவதற்கு வேண்டியவற்றைச் செய்து கொண்டே இருக்கவும், அவள் சக்திக்கு உட்படாமல் அவள் கண்கள் அழுதன. 

நன்கு பதமறிந்து பாலைக் காய்ச்சிப் பிரையிட்டுத் தோய்த்த தயிர்த்தாழி இயல்பாகவே விளம்பழம் போன்று மணங்கமழும் என்பது பற்றி விளம்பழம் கமழும் குழிசி என்றார். பதனறிந்து தோய்ந்த தயிர்த் தாழி முடை நாறுதலின்று ஆகலின் விளம்பழம் கமழும் என்பதற்கு விளம்பழம் போன்று இனிதாக மணங்கமழும் குழிசி என்னலே அமைவுடைத்து, இயக்கம் முழங்கும் என்க. கமம் - நிறைவு. "கமம் நிறைந்தியலும்" என்பது தொல்காப்பியம். தயிர்த் தாழி சூற்கொண்ட வயிறு போலப் பருத்திருத்தல் பற்றிச் சூற்குழிசி என்றார். தன் வரைத்தன்றியும் என்றதற்கு அவள் வரைத்தன்றியும் எனப் பொருள் கோடல் சிறப்பு.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *