வேங்கைமார்பன் என்பவன் கானப்பேரெயில் என்னும் ஊரை ஆண்ட சங்ககால மன்னன்
1. சொல் பொருள்
சங்ககாலச் சிற்றரசன், கானப்பேரெயில் என்னும் ஊரை ஆண்ட மன்னன்.
2. சொல் பொருள் விளக்கம்
சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்ட ஊர் இக்காலத்தில் காளையார் கோயில் எனப் பெயர் பூண்டுள்ளது. அவ்வூரை ஆட்சிபுரிந்தவன் வேங்கைமார்பன். பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் பகை கொண்டான் அவன். போர் நிகழ்ந்தது; பாண்டியன் வெற்றி பெற்றான். வேங்கைமார்பன் தோல்வியுற்றான். தோல்வியுற்ற தன் கானப்பேரெயிலை இனி பாண்டியனிடம் இருந்து அவன் மீட்க முடியாது என்று வருந்தினான்.
புறநானுற்றில் காளையார் கோவிலில் இரும்பு உவமை:
‘கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிது’ – புறநானூறு, 21.
கானப்பேரெயிலின் அரண்களின் சிறப்பையும், அந்த ஊருக்கு உரியவனான வேங்கை மார்பன், உக்கிரப் பெருவழுதியிடம் தோல்வியுற்ற பிறகு, தன் ஊரை மீட்பது, உலையில் காய்ச்சிய இரும்பின் மீது சொரிந்த நீரை மீட்பது போன்ற அரிய செயல் என்று எண்ணி வருந்துவதாகவும் இப்பாடலில், ஐயூர் மூலங்கிழார் கூறுகிறார்.
வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain of sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்ப னிரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. – புறநானூறு 21/6-9
உன்னைப் புகழ்ந்து பாடும் புலவோரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ!
நில எல்லையைக் கடந்த பாதலத்தே உள்ள ஆழ்ந்த அகழியினையும்,
உயரத்தால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும், மதிலில் வானத்தில் மீனைப் பூத்தாற் போன்ற வடிவுடைய
அம்பெய்தற்குரிய துளைகளை உடைய ஏவல் அறையினையும்,
வெயில் கதிர்கள் நுழையாத அடர்த்தியான மரங்கள் நிறைந்த காவற் காட்டினையும் உடையவனே!
நெருங்கி கைப்பற்ற முடியாத சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்,
வலிமையான கையை உடைய கொல்லனால் செந்தீயினில் சுடப்பட்ட இரும்பினில் ஊற்றப்பட்டு உண்ட நீர் திரும்பப் பெறல் இயலாதது போல,
உக்கிரப் பெருவழுதியிடமிருந்து இனி கைக்கொள்ள முடியாது எனக் கருதி வேங்கை மார்பன் வருந்த,
நாள்தோறும் வெற்றி கொள்ளத் தழைத்த தும்பையையுடைய, புலவர் பாடப்படும் துறைகளை முடித்த, வெற்றியினை உடைய வேந்தனே!
உன்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே மறைந்து போக வெற்றிப் புகழுடனே நீ விளங்கி உன் வேல் பொலிவதாக!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்