சொல் பொருள்
(பெ) 1. உள்வெளி, 2. தேவலோகம், 3. அப்பாலுள்ள நாடு, 4. வானம், 5. வெளி,
சொல் பொருள் விளக்கம்
1. உள்வெளி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
interior space, heaven, distant country, sky, open space
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அர வழங்கும் பெரும் தெய்வத்து வளை ஞரலும் பனி பௌவத்து குண குட கடலோடு ஆயிடை மணந்த பந்தர் அந்தரம் வேய்ந்து வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/13-17 பாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை, சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல், கிழக்கிலும், மேற்கிலும் கடல்கள் ஆகிய இவற்றிடையே உள்ள அரசரும் சான்றோரும் கூடிச் சேர்ந்த பந்தலின் உள்புறத்தை (நெய்தல் மாலைகளால்) அலங்கரித்தலால் வளமை மிக்க மலர்ந்த கண்போன்ற நெய்தல் மலர்கள் பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின் தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் ஒண் தொடி மடவரால் நின்னோடு அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76 பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும், புதிய மலர் போன்ற தேமலையும் கொண்டு, குளிர்ந்த நீர்ப்பெருக்கில் ஆடித் தன்னுடைய பெண்மை நலத்தில் மேன்மையுற்றாள் ஒளிரும் வளையல்களையும் இளைமையையும் கொண்ட அவள், உன்னுடன் – வானுலக மகளிர்க்குத் தெய்வமே போன்று – குலமகளிர் தம் கற்புடைமையால் அந்தர மகளிரும் வணங்கும் பத்தினித்தெய்வமாய் நலம் மேம்பட்டுப் பலரும் அறியத்தக்க விளக்கம் எய்துவர் – ஔவை.சு.து.விளக்கம் அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/19-21 கடற்கு அப்புறத்ததாயுள்ள நாட்டிலுள்ள பெறற்கரிய அமுதம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல் – ஔவை.சு.து.உரை அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ – அகம் 68/14,15 வானிடத்தே இடித்ததுடன் பெய்தலைச் செய்த கூட்டமாய பல மேகங்கள் – நாட்டார் உரை அந்தர பல் இயம் கறங்க – திரு 119 ஆகாயத்தினது துந்துபி ஒலிப்ப – நச்.உரை அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து – பரி 24/96,97 அந்தரத்திலே உள்ள ஆகாயகங்கையில் ஆயிரம் கண்ணையுடையவனாகிய இந்திரன் நீராடும் தன்மையையுடையது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்