Skip to content
அரையம்

அரையம் என்பதன் பொருள்அரசமரம்

1. சொல் பொருள்

(பெ) 1. அரசமரம், 2. சங்ககாலத்து ஊர், 

2. சொல் பொருள் விளக்கம்

அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை என்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப்பெற்ற அம்முச் சாரியையை இறுதியாகக் கொண்டு வழங்குவதாயிற்று.

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும்” (தொல். 284)

என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை ஆவிரம் என நின்று ஆவாரம் என மருவிவிட்டது. (ஐங்குறு. 325. ஒளவை சு.து.)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

pipal tree

a city in sangam period

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பனையும் அரையும் ஆவிரை கிளவியும் - எழுத். உயி.மயங்:81/1

வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ,
போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும்
வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது
எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே. – ஐங் 325/1,2 

வேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு
பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும்,

கடிய கதழும் நெடு வரைப் படப்பை
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,            
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:– புறம் 202/8

நீடிய நிலையையுடைய அரையத்தினது கேட்டையும் இனிக் கேட்பாயாக.

அரையம் என்பது இருங்கோவேள் என்ற மன்னனுக்குரியது. இருங்கோவேள் மரபினர் இப்போது பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த ஊர்களில் வாழ்கின்றனர் என்பர் ஔவை.சு.து. அவர்கள் தம் புறப்பாட்டு 202 உரை விளக்கத்தில். அரையம் என்னும் ஊர் அழிந்தது பற்றிக் கபிலர் இங்குக் குறிப்பிடுகிறார் .இதனை “இருபாற் பெயரிய உருகெழு மூதூர்” என்று அவர் விளக்குகிறார். புறநானூற்றுப் பழைய உரை இதனைச் சிற்றரையம், பேரரையம் எனக் குறிப்பிடுகிறது. இவ்வூர் கோடிபல அடுக்கிய செல்வத்தை புலிகடிமால் என்னும் இருங்கோவேள் மன்னனுக்கு வழங்கியதாம். இந்த இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்தானாம். அதன் விளைவால் இந்த ஊருக்குக் கேடு வந்தது என்கிறார் கபிலர்

அரையோடு அலர் பிண்டி மருவி குண்டிகை - தேவா-சம்:502/1

அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாக

அரசுடன் ஆல்அத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி 
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் 
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே. -திருநீறு. 10:3 
திருமந்திரம்.- ஆறாம் தந்திரம். 

ஆலும் அரசும் காலொடு துளக்கி
புன்கும் நாவலும் புரள எற்றி - உஞ்ஞை:51/49,50

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *