Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சோழநாட்டு ஊர்,

சொல் பொருள் விளக்கம்

ஒரு சோழநாட்டு ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city on chozha country.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அழும்பிலைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் மூன்று குறிப்புகள் உள்ளன.

நன்னன்,ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/7-16

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய
பழமையான பலவான நெல்லையுடைய பல குடிப் பரப்பினை உடையதும்

இவ்வடிகளால், அழும்பில் என்ற ஊர் நெல்வளம் மிக்கது என்றும், அது சோழமன்னன் சென்னியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்றும் அறிகிறோம். எனினும் இப்பாடலுக்கான உரை விளக்கத்தில் அழும்பில் என்பது பாண்டிய நாட்டு ஊர் என்ப என்று நாட்டார் குறிப்பிடுகிறார்.

வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்
வலம்புரி கோசர் அவைக்களத்தானும் – புறம் 283/2-6

வாளைமீனை நீர்நாய் தன் நாட்காலை உணவாகப் பெற்றுண்டு
உணவு பெறாமல் அங்கே உறையும் பாம்புகளை வரால்மீன் எனக் கருதி மயங்கி
மாறுகொள்ளும் முதலைகளோடு முறைமுறை மாறுபட்டு நீங்கும்
அழும்பில் என்னும் ஊரையுடையோன் அடங்கானாய் எதிர்நின்று பொருவன் என்று கருதியெழும்
வெற்றிவிரும்பும் கோசருடைய அவைக்களத்தின்கண்ணும்
-இந்த அழும்பில் என்பது வேளிர்க்குரியது என்றும் சோழவேந்தர்க்குரியது என்றும் ஔவை.சு.து. அவர்கள்
தம் உரையில் குறிப்பிடுவார்.

நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 343-345

நிலத்தையும் (அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத
விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்
– அழும்பில் என்பது வேளிருடைய ஊர் என்று தெரிகிறது. மான விறல் வெள் என்பான் அக் காலத்தே
உடனிருந்தான் போலும். புதுக்கோட்டைப் பகுதியில் இப்பொழுது அம்புக்கோயில் என வழங்கப்படும்
ஊரே அழும்பில் என்னும் ஊர் என்ப என்கிறார் உரையாசிரியர் பொ.வே.சோ அவர்கள்.

இந்த அகப்பாட்டாலும், புறப்பாட்டாலும் அழும்பில் என்ற ஊர் மிகுவளம் பொருந்தியதாக அறிகிறோம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *