Skip to content

சொல் பொருள்

(வி) 1. நெய்து துணியை உருவாக்குவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகச் செய் / உருவாக்கு, 2. இடு, பதி, 3. வரை, எழுது, 4. கோடிடு, 5. ஒட்டி உறவாடு, 6. நெசவுசெய், நெய், 

2. (பெ) 1.நகை, அணிகலன், அலங்காரப்பொருள்கள், 2. நூல், நூல் இழையே இழையெனப்படும்

சொல் பொருள் விளக்கம்

(1) காக்கும் தெய்வமாகிய திருமாலின் ஐந்து படைக்கலங்களும் எழுதி நூலிலே கோத்துக் கழுத்திலே அணிந்தால் பீடை அணுகாது என்பது பண்டையோர் கொள்கை. இதனாலேயே இழை என்னும் பெயர் நகைக்கு அமைந்தது. நூலின் பெயராகிய இழை என்பது நகையின் பெயராயிற்று.
(தமிழகம் அலையும் கலையும். 177.)

(2) இழைப்பு வேலைப்பாடு கொண்ட நகை, இழை எனப்பெயர் பெற்றது. பொன்னைக் கம்பிகளாக இழைத்துச் செய்யப்பட்ட நகை இழை எனப்பட்டது போலும் ! ‘கல்லிழைத்த நகை’ என்பது இக்கால வழக்கிலும் உள்ளதேயாகும். எனவே பொன் வடங்களும், கல் இழைத்துச் செய்யப்பட்ட நகைகளும் ‘இழை’ எனப் பெயர் பெற்றிருக்கலாம். பின்பு காலப்போக்கில் இழை என்பது எல்லா நகைகளையும் குறிக்கலாயிற்று போலும் ! (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 527)

(3) பொன் வேறாகவும் மணிகள் வேறாகவும் எளிதில் பிரிந்து சிதறாதபடி இணைப்பாக இழைக்கப்பட்ட அணிகலன்களை இழை என்பது உணர்த்தும். (சங்க நூற் கட்டுரைகள். 56)

4. நூல் இழையே இழையெனப்படும். நூலிழைபோல் இழைத்துச் செய்யப்படும் பொன்னணிகலம் இழை எனவும் படும். அவ்விழையை அணிவதால் அணியிழை, ஆயிழை முதலாகப் பல பெயர்கள் அன்மொழித் தொகையாய் வழங்கலாயின. நூல் இழை போல் நீண்டமைந்த ‘குடரை’ இழை என்பது மதுரையை அடுத்த திருமங்கல வட்டார வழக்கு. இடைவிடாது ஒழுகும் நெய் ‘இழுது’ எனப்படுவது எண்ணத்தக்கது. ‘விழுது’ என்பது வெண்ணெயும் இழுது என்பது நெய்யுமாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

make or construct as though make a cloth by weaving, place, inlay, draw, paint, draw a line, be close together, weave, Jewellery, Ornament, thread

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3

பூமியைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் உயரமானது;
கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள
கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்

செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு – பரி 32/1-4

திருமகளுக்கு இட்ட திலகம் போல், தனது தலைமைப் பண்பிற்கு ஏற்ப,
இந்த உலகத்தில் திகழ்ந்து புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
பொய்யாகிப்போய்விடுமோ மதுரை நகரின் புகழ்? ஒப்பனை செய்யப்பட்ட தேரினையுடைய பாண்டியனின்
வையை ஆறு இருக்கும் காலம் அளவும்.

சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ – கலி 64/12-14

வண்டுகள் ஒலிக்கும் பூக்களைக் கொண்ட மாலையையுடைய அழகிய நல்ல பெண்ணே! நான் உனது
திருத்தமான அணிகலன் அணிந்த மென்மையான தோள்களில் வரைந்த, இதோ இங்கிருக்கிற,
கரும்புப் படங்கள் எல்லாம் உன் உழவினால் உண்டானதன்றோ?

சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப – அகம் 289/9-11

நாம் சேய்மைக்கண் உறையும் தனிமையால் நாள்தோறும் முறைமுறையாகக் கோடிட்டுவந்த
திண்ணிய சுவரினைப் பார்த்து உடனுறையப்பெறாமையை நினைந்து கண்ணீர்
நூல் அற்று உதிரும் முத்துக்களைப் போல முகிழ்த்தமுலை மீது தெறித்துவிழ

அக் காலத்தில் நாள்காட்டிகள் கிடையா. எனவே, நாள்களைக் கனக்கிட, செம்மண் சுவற்றில் சுண்ணாம்பாலோ
சுண்ணாம்புச் சுவற்றில் செம்மண் கட்டியாலோ ஒவ்வொருநாளும் ஒரு சிறிய கோடு போடுவார்கள். இதனை
வைத்து நாள்களைக் கணக்கிடுவார்கள். இவ்வாறு கோடுபோடுவதை இங்கி இழைத்தல் என்கிறார் புலவர்.

முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248

(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 39/9,10

வெண்மையான பருத்தி நூலால் இழைக்கப்படாத, நுண்ணிய மயிர் போன்ற இழைகளையுடைய,
பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்,

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இழைகள் அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் – குறு 345/1

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 80

(வியர்வையில் நனைந்து, கிழிந்ததைத் தைத்ததினால் வேறு நூல் நுழைந்த)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *