Skip to content
உழை

உழை என்பது மான்

1. சொல் பொருள்

(பெ) 1. மான், புள்ளிமான் 2. இடம், 3. நான்காவது சுரம்,

2. (வி.அ) பக்கத்தில்,

2. சொல் பொருள் விளக்கம்

மானினங்களில் இரலையினத்திலிருந்து பிரித்துணரப்படும் மற்றோர் இனம் கலைமானினம் ( Deer ) என்று கூறப்படும் . கலை மானினத்தில் இருவகை மான்கள் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன . உழையென்பது ஒருவகை . கடமா என்பது மற்றொரு வகை . உழையினம் தற்காலத்தில் புள்ளிமான் என்று அழைக்கப்படுகின்றது . உழை யென்ற பெயர் ஆண் மானிற்கும் பெண் மானிற்கும் பொதுப் பெயராக வழங்கிவந்த போதிலும் கலையென்ற பெயர் உழையில் ஆண் மானிற்கு மட்டுமே வழங்கி வந்திருக்கின்றது. ஆண் மானிற்கு மட்டுமே அழகிய கவைத்த கிளைவிட்ட கொம்புகள் இருப்பதால் ஆண் மான்களுக்கு மட்டும் தனிப் பெயராகக் கலை என்ற பெயர் வழங்கப்பட்டது . கலையெனும் பெயரை இந்த இன மான்வகை களுக்கு இனப் பெயராகப் பொதுப் பெயராக அழைப்பது நல்லது .

சங்க நூல்களில் கலைமானின் கொம்புபற்றிச் சில அருமையான அறிவியற் செய்திகள் காணப்படுகின்றன. கலைமான் தன் கொம்புகளை உதிர்ப்பது அரிய செய்தி யாகையால் விலங்கு நூலார் பலர் இதை ஆராய்ந்து எழுதியுள்ளனர் . விலங்கு நூலார் கலைமானின் கொம்பு பற்றி ஆராய்ந்து கூறிய செய்திகளைச் சங்க நூல்கள் கூறுவது மிகுந்த வியப்பை அளிக்கின்றது . கலைமானின் மான்களின் கொம்புகள் இரலைமானினக் கொம்புகள் போலக் கிளைகளின்றி நேராக வளர்வதில்லை . கொம்புகள் அடியிலேயே கிளையுடன் காணப்படும் . மரத்தில் கவைகளுடன் கிளைகள் காணப்படுவது போலக் கொம்பிலும் கவைகள் காணப்படும். இதனால் சங்க நூல்கள் கலைமானின் கொம்பை கவைக்கோடு என்றும் கவை மருப்பு என்றும் கூறுகின்றன . கலைமானைக் கவைக்கலை என்றும் கலைமானின் தலையை கவைத்தலை ! என்றும் அழைக்கின்றன.

உழை
உழை

புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை -ஐங்குறு நூறு, 373 .

வறன்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை -அகம் , 395

கவைத்தலை முதுகலை காலி னொற்றிப் – குறுந்தொகை , 213 .

கிளையுடைய கொம்புடையதை நன்கு உணர்ந்தே “கவைக் கோடு ( antler ) என்றனர் . கலைமானின் கொம்பு முதன் முதலில் தோன்றும்போது அக்கொம்பு ஒரே ஒரு கவையாக இருக்கும் ( In young deer the antler is a simple spike- with the growth of the animal in the process of periodic renewal it throws out a branch or tine from near its base) கலைமான் நன்கு வளர்ந்து வரும் காலத்தில் தோன்றும் புதிய மறு கொம்புகள் ஒரு கிளைக்கு மேற்பட்ட கிளைகளுடன் வளரும் . இதைச் சங்க நூற்புலவர்கள் நன்கு கண்டிருந்தனர் .

….பொறிவரிக்
கலைமான் தலையின் முதன் முதல் கவர்த்த
கோடலங் கவட்ட குறுங்கால் உழிஞ்சிற் -அகம் , 151 .

கலைமானின் தலையில் முதன் முதலாகத் தோன்றிய கவர்த்த கொம்பு போல உழிஞ்சில் – மரத்தின் கவையான கொம்பு இருந்ததாகக் கூறியிருப்பதைக் காணலாம் . கலைமானின் கொம்பு முதலில் தோன்றும்போது ஒரே ஒரு கவையாகக் காணப்படும் என்பதைத் தெளிவாகக் கூறியிருப்பது அரிய செய்தியாகும் . முதிய கலை மானின் கொம்பு சில கிளைகளுடன் இருக்கும் என்பதும் விலங்கு நூலார் கண்டதாகும் . இதையும் சங்க நூற்புலவர்கள் நன்கு கண்டிருந்தனர் . உழிஞ்சில் மரம் கவை கவையாகக் கிளைவிடும் தன்மையுடையது என்பதைச் செடி நூலார் கண்டுள்ளனர் . அதே மரத்தின் மரக்கவையை ( Much branched Albizzia amara ) கலைமான் கொம்பிற்கு ஒப்பிட்டது அரிய உவமையாகும் .

பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச் -அகம் , 283 .

அகநானூறு பல கவர்த்த கிளைகளையுடைய கொம்பையுடைய முதியமான் என்று தெளிவாகக் கூறியிருப்பதைக் காணலாம் . பல கவைகளையுடைய முதியமானின் கொம்பையே கவைக் கோட்டு முதுகலை , கவைத்தலை முதுகலை அகநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன. கலைமானின் கவைத்த கொம்புகள் வறண்ட மரம்போலிருப்பதாகவும் அகப்பாடல் 395 கூறுவது அழகிய உவமையாகும் .

அழன் மேய்ந் துண்ட நிழன்மாய் இயவின்
வறன்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை -அகம் . 395

உழை
உழை

மழையற்ற வறட்சிக் காலத்தில் காட்டு மரங்களின் நுனிக் கொம்புகள் வறண்டுபோய் இலையற்றுக் காய்ந்து கிடக்கும் . இத்தகைய வறண்ட கொம்புகளைக் கலைமானின் கொம்பிற்கு ஒப்பிட்டுக் காடுகளைப் பாது காப்பதைக் கூறும் அறிவியல் நூல்கள் Stag headedness என்று கூறும் . ( The water shortage consequent on any breakdown of this mechanism is rapidly reflected in the drying up of the top extremities of the tree giving it a condition known as Stag – headedness — Forestry by H. G. Champion )

இதே உவமையைச் சங்கப் பாடலும் கையாண்டிருப்பதைக் காணும்போது சங்கப்புலவர்களின் நுண்ணிய அறிவைப் போற்றாதிருக்க முடியாது . கலைமானின் கவை மருப்பிற்கும் வறண்ட மரத்தின் கவைக் கொம்பிற்கும் தோற்றத்தில் உள்ள ஒற்றுமை நேரில் கண்டோர்க்கு நன்கு விளங்கும் . முதன் முதலில் தோன்றிய கலைமானின் கவைத்த கொம்பு ஏறக்குறைய ஓராண்டுக் காலத்தில் விழுந்து விடுகின்றது . பின்னர்ப் புதிய கொம்பு முளைக்கின்றது . அதுவும் சிறிது காலத்தில் முற்றி உதிர்ந்து விடுகின்றது . இம் முறையாகக் கலைமான்கள் கொம்புகளைவளர்த்துப் பின்னர் உதிர்த்து விடுவதும் புதியதாக வளர்ப்பதும் இயற்கையில் காணும் மிக வியப்பான செய்தியாகும். இதே செய்தியைச் சங்கநூற் புலவர்கள் நுண்ணிய தாக ஆராய்ச்சி செய்து கண்டு தெளிவாகக் கூறியுள்ளனர் . புல் நிறைந்த செழிப்பான காலத்தில் கொம்புகள் நன்றாக வளர்கின்றன . பின்னர் வறட்சிக் காலத்தில் கொம்புகள் உதிர்ந்து விடுகின்றன . ( Stags wear their antlers for a period after the rut and then shed them . The time of shedding varies with age………. The period of horn growth everywhere coincides with the season when food is most abundant )

பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும் -அகம் , 147 .

உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட் டெழிற்கலை அருகயம் நோக்கித் -அகம் , 353 .

அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்-புறம் , 23 .

இறுகுபுல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை – நற்றிணை , 265 .

கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை -அகம் , 97 .

உழை
உழை

அறுகோடு என்பதற்கு உதிரும் கோடு என்று உரை கூறியுள்ளனர் . தானாக இற்று வீழும் கோட்டையே அறுகோடு என்றனர் . அறுகோட்டு முற்றல் என்று நற்றிணைப் பாடல் ( 265 ) கூறுவது கூர்ந்து ; கவனிக்கத் தக்கது . முற்றிய கொம்பு அறுந்து வீழ்கின்றது என்பதைத் தெரிந்தே ‘ முற்றல் என்று கூறினர் . அகநானூற்றுப் பாடலும் ( 97 ) ‘ வறனுறல் அங்கோடு என்று கூறுவதைக் கவனிக்கவேண்டும் . வறண்டுபோன அழகிய கொம்பு உதிர என்று கூறி யதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் . அகப்பாடலில் கொம்புதிர்ந்த காலத்தில் கள்ளியங் காட்டிடை வாழ்ந்த கலைமானைப் புலி கொன்றதாகக் யுள்ளனர் . வறண்ட மரம் போலிருப்பதாக அகநானூறு 395 ஆம் பாடலும் கூறியுள்ளது . ஆதலின் சங்கப்புலவர்கள் கலைமான்கள் கொம்புதிர்ப்பதை ( Shedding of antlers ) நன்கு தெளிவாக உணர்ந்து கூறியுள்ளனர் என்பதில் ஐயமில்லை . அறு கோடு
என்ற வழக்குக் கலைமான்கள் கொம்புதிர்க்கும் செயலுக்குச் சங்கப் புலவர்கள் வழங்கிய : அறிவியற் சொல்லாகும் . கொம்புகள் உதிர்ந்ததும் – திரும்பவும் புதிய கொம்புகள் முளைக்கும் . அவ்வாறு முளைக்கும் புதிய கொம்பு முதலில் தோலாலும் மெல்லிய மயிராலும் மூடப்பட்ட சிறிய மொண்ணைக் கொம்பாகத் தோன்றும் . இக்கொம்பு மிக மிக மென்மையாகவும் மெத்தெனவும் வெல்வெட் போன்று இருக்கும் . இக்கொம்பை முட்டுவதற்கு பயன்படுத்துவதில்லை . இக்கொம்பிற்கு ஊறு ஏற்பட்டால் கொம்பு நன்கு வளராது . இந்தப் புதிய , இளைய கொம்பைப் பற்றியும்
சங்க நூல்களில் நுண்ணிய செய்திகள் வருவது மிக்க வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது . (The newly – grown antler is encased in a thick soft skin called Velvet . Its softness and its dense covering mat of fine hairs give it the face and the look of velvet……… when a deer s antlers have reached the limits of growth a ring of bony matter, the burr forms just above the point where the antler unites with its base or pedicel . The ring gradually constricts and so cuts off the flow of blood . As the blood vessels dry up the velvet shrinks, dries and commences to peel off ……… stripped of velvet in the solid lhorn .)

புள்ளி அம்பிணை உணீஇய உள்ளி
அறுமருப்பு ஒழித்த தலைய தோல் பொதி
மறு மருப் பிளங்கோ டதிரக் கூஉஞ் – அகம் . 291.

உதிர்ந்த கொம்பை ஒழித்த தலையில் தோல் பொதிந்த கொம்பான இளங்கொம்புகள் அதிரும்படி கலைமான் கூவியதாக அகநானூறு 291 ஆம் பாடல் கூறியுள்ள செய்தி மிக அரிய , பெரிய பொருள் பொதிந்த செய்தியாகும். அறு பருப்பை ஒழித்த தலை என்றதால் .கலைமான் கொம்பு திர்த்த செய்தி , தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . கொம்புதிர்த்துத் தலையில் புதியதாக வளரும் கொம்பை மறு கொம்பு என்பதைத் தெளிவாகக் காட்டவே ‘ மறுமருப்பு என்றும் , அந்தக்கொம்பு இளங்கொம்பு என்றும் கூறியுள்ளது . அந்த இளங்கொம்பு எவ்வளவு மென்மையானது என்றால் கலைமான் பெண்மானை அழைக்கக் கூப்பிடும் போது அதன் வலிய குரலோசையால் அந்த இளங் கொம்பு நடுங்கி அதிர்ந்தது . இதற்கு மேலும் தெளிவாக இந்த அறிவியற் செய்தியைக் கூறமுடியுமா ? உதிர்ந்த கொம்பை , அறு மருப்பை முற்றல் என்று கூறிய அகநானூறு திரும்பி முளைக்கும் புதியகொம்பை மறுமருப்பை இளங்கோடு என்று கூறியதைக் காண்க . சங்கப் புலவர்கள் உவமைகள் வாயிலாகவே இயற்கைப் பொருட்களை , செய்திகளை , நிகழ்ச்சிகளை விளக்குவதில் மிக மிக வல்லவர்கள் . கற்பனைகளில் உழன்று இல்லா ததை ஒப்பிட்டுப் பொல்லாத மயக்கத்தில் நம்மை ஆழ்த்துவதில்லை . ஆதலின் புதியதாகத் திரும்பவும் முளைக்கும் மறுகொம்பு வெல்வெட் போல மெத்தென்று இருப்பதை மற்றோர் அழகிய உவமையால் விளக்கிச் சென்றனர் .

“சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்புமுதிர்பு
நன்மான் உழையின் ஏறெனத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப ” – நற்றிணை , 19 .

தாழைக்கு ஆண்பூ தனியாகவும் பெண்பூ தனியாகவும் காணப்படும் . ஆண் பூவின் மகரந்தத் தூள்கள் ஒன்று சேர்ந்து இணைந்து மெத்தென்று மென்மையாக நீண்டு இருக்கும் . தாழையின் காய்ந்த ஆண் பூவைத் துணிகளுக்கு மணமூட்டப் பயன்படுத்துவது வழக்கம் . இந்த ஆண்பூவை யானையின் கொம்பு போல அரும்பு முதிர்வதாக நற்றிணை கூறுகின்றது. உருவில் யானையின் தந்தத்திற்கும் தாழையின் ஆண் பூவிற்கும் ஒப்புமை உண்டு. ஆனால் தாழையின் ஆண்பூ உருவிலும் அதை விட முக்கியமாக மென்மைத் தன்மையிலும் கலைமானின் இளைய கொம்பிற்கு மிகுந்த ஒப்புமையுடையது . தாழையின் ஆண் அரும்பு மெத்தென்று ” வெல்வெட் ” போலத் தொட்டுப் பார்த்தால் தெரியும் . அதே போன்றே உழைமானின் ஆணிற்கு இளங்கொம்பு இருப்பதால் இந்த அழகிய நுண்ணிய நற்றிணையில் கூறப்பட்டது . யானையின் தந்தம் போலத் தோன்றினும் அதைப்போல உறுதியின்றித் தாழையின் ஆண் அரும்பு போல மெத்தென்று இருந்ததாக நற்றிணை கூறியதை உரைகூறியவர் பலர் அறிந்து கொள்ளவில்லை . தாழையின் ஆண் அரும்பே மிக்க மணமானதென்பதை உணர்ந்தே தாழையின் அரும்பு முதிர்ந்து விழவுக்களம் கமழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது . உழையின் வேறுபடத் தோன்றி என்று வரும் பாடத்தைவிட உழையின் ஏறெனத் தோன்றி என்ற பாடமே சிறந்தது. கலைமானின் கொம்பை திரி மருப்பு என்று சில பாடல்கள் அழைக்கின்றன .

தெள்ளறல் பருகிய திரிமருப் பெழிற்கலை
புள்ளியம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் , 184 .

பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான்
திரிமருப்பு ஏறொடு தேரல் தேர்க்குஓட – கலித்தொகை , 13 .

புள்ளிமான்
உழை

கலைமானின் கொம்பு கவைத்து இருப்பதோடு சிறிது முறுக்கியும் இருக்கும் . இதையே திரிமருப்பு என்று கூறியுள்ளனர் . ஆனால் திரிமருப்பு என்ற வழக்கு இரலையின மான்களின் கொம்பிற்கு உரியதாகச் சங்க நூல்களில் வழங்கியுள்ளது . இரலைக்கே திரிமருப்புச் சிறந்ததாகும் . இரலையின மானிற்குச் சங்க இலக்கியத்தில் எந்தப் பாடலிலும் கவைத்த மருப்பிருப்பதாகக் கூறப்படவில்லை. இரலையின மான்கொம்பை நெறி கோடு என்று கூறியிருப்பதற்கு எதிராக கவைக் கோடு என்று கலையினமானின் கொம்பு விளக்கப்பட்டுள்ளதைக் காணலாம் . கலைமானிற்குக் கொம்புகள் இணை கூடும் காலத்தில் ( Mating season ) பெண்மானைக் கவர்வதற்காகப் போரிட உதவுகின்றன. கொடிய விலங்கு களிடமிருந்து தப்ப ஓரளவு கலைமானின் கொம்புகள் உதவுகின்றன . உழைமானைப் பிறமான்வகைகளிலிருந்து எளிதில் பிரித்துணர அதன்புள்ளிகள் நிறைந்த உடல் தோற்றம் உதவுகின்றது .

செந்நாய் வெரீஇய புகருழை யொருத்தல் – அகம் , 219 .

புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி – புறம் , 152

தெள்ள றல் பருகிய திரிமருப் பெழிற்கலை
புள்ளியம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் , 184 .

அள்ள லாடிய புள்ளி வரிக்கலை. – நற்றிணை , 265 .

உவரி யொருத்த லுழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற் – குறுந்தொகை , 391

புள்ளி அம்பிணை உணீஇய உள்ளி
அறுமருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் , 291 .

கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை – அகம் , 27 .

பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான் – கலி , 13 .

உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட் டெழிற்கலை அறுகயம் நோக்கித் – அகம் , 353 .

புகர் உழை , புகர்க்கலை , புள்ளியம்பிணை , புள்ளி வரிக்கலை , புள்ளியம் பொறிக்கலை என்ற சொற்கள் உழைமானின் புள்ளியுடைய தன்மையையே சிறப்பாகக் கூறுகின்றன . புகருடையதால் புகரி” என்றே குறுந்தொகை அழைப்பதைக் காணலாம் . பொரி மலர்ந்தது போல் பொறியுடைய மான் என்று கலித்தொகை கூறுகின்றது. வயங்கு பொறிகள் நிறைந்த உடல் என்று அகநானூறு கூறுகின்றது. பொறி போன்ற புள்ளிகள் வயிற்றின் அடிப்பகுதியில் நீண்ட கோடுகள் போல வரிகளாகக் காணப்படும் என்று விலங்கு – நூலார் கூறுவர் . ( Its coat is rufous fawn profusely spotted with white in all ages . The lower series of spots on the flanks are arranged in longitudinal rows and suggest broken linear markings ) புள்ளி வரிக்கலை என்று நற்றிணை 265 ஆம் பாடல் குறிப்பாகப் புள்ளிகளால் அமைந்தவரிகளைக் கூறியிருப்பதைக் காணலாம் .

புள்ளியும் கொம்பும் கலைமான் மிக அழகுடைய மானாகக் காட்சியளிக்கின்றது எழிற்கலை என்று சங்க நூல்கள் ( அகம் , 184-353 ; புறம் , 23 ) கூறுகின்றன . “ புள்ளியுழைமான் தோலொன்றுடுத்து ” என்று அப்பரும் பாடியிருக்கிறார் . கலைமானின் தோல் புள்ளிகளுடன் இருப்பது கலைமானுக்குப் காப்பைத் தருகின் றதென அறிவியலார் கருதுகின் றனர் . புள்ளிகள் நிறைந்த மரநிழலில் புள்ளிகள் நிறைந்த கலை மான்களைப் பிரித்துக் காண்பதரிது என்றும் சூழ்நிலையில் மறைந்து விடுகின்றன என்றும் கூறுவர். (A dappled coat is probably protective and makes for better concealment. They harmonize with the broken flecks of light and shade made by sunshine filtering through leaves ) சங்கப் புலவர்களும் கலைமானின் புள்ளித்தோல் புள்ளி நிழல் போல இருந்ததைக் கூறியுள்ளனர் ,

காலொடு
கனையெரி நிகழ்ந்த இலையில் அங்காட்டு
உழைப்புறத் தன்ன புள்ளி நீழல்
அசைஇய பொழுதிற் பசைஇ வந்திவண் – அகம் , 379 .

காற்றுக் கடுமையாக வீசி இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அசைபோட்டுக் கொண்டிருந்த புள்ளிமானின் புறம்போலிருந்ததாகக் கூறியது அரிய அழகிய உவமை . உழைமான்கள் திறந்த காடுகளிலும் நீர் அருகிலும் விரும்பி வாழும்.

படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழந் தாஅங்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் – நற்றிணை , 274 .

அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
யெறிமட மாற்கு வல்சி யாகும் – நற்றிணை , 6

உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவாய் – நற்றிணை , 113

கவைத்தலை முதுகலை காலி னொற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்
ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்து நடை மரபிற்றன் மறிக்குகிழ லாகி
நின்று வெயில் கழிக்கு மென்ப – குறுந்தொகை 213

குறுமரமான குமிழ மரத்தின் கனியைக் கவர்ந்து விரும்பி உண்பதாகக் கூறியது உண்மைச் செய்தியே . உழைமான் அணந்து , அஃதாவது முன்கால்களை உயர்த்தி நின்று இலந்தை மரத்தின் கிளைகளை வளைத்துச் சதை பொதிந்த இலந்தைக் கனிகளை உண்பதாகவும் உதிர்ப்பதாகவும் நற்றிணை 113 ஆம் பாடல் கூறும் இச்செய்தியும் உண்மையானதே , காலினால் உதைத்துப் பசியைப் போக்கமரக்கொம்பை வளைத்ததாகக் குறுந்தொகையும் கூறுகின்றது . உழைமான்கள் இலந்தைக் கனியையும் குமிழங்கனியையும் விரும்பி உண்பதை விலங்கு நூலாரும் பார்த்துள்ளனர் .

..புல்மறந்து
அலங்கல் வான்கழை உதிர்கெல் நோக்கிக்
கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண் – அகம் , 129 .

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
ழ்ப்படு முதுகா யுழையினங் கவரும் – குறுந்தொகை, 68 .

உழுந்தின் காய்களை உழைமான்கள் உண்பதாகக் கூறுவதையும் காணலாம் . புள்ளிமான்கள் புல்லை மறந்து மூங்கில் நெல்லையும் விரும்பி உண்ணும் அகநானூறு 129 ஆம் பாடல் கூறுகின்றது . இதிலிருந்து உழைமான்கள் வயலில் நுழையுமென்பது விளங்கும் . புள்ளிமான்கள் காடுகளில் உள்ள புல்வெளிகளில் பத்திலிருந்து முப்பதுவரை கூட்டமாக , மந்தையாக மேயும் . இந்தக் கூட்டத்தை இனநிரை என்று அகப்பாடல் 249. கூறுகின்றது . புள்ளிமான்களில் ஆணும் பெண்ணும் குட்டிகளும் மந்தையாகக் காணப்படும் என்று கூறுவர் . பெண் மான் குட்டிகளைப் பாதுகாக்கும் தாயுணர்ச்சி மிகுந்ததாகப் புறநானூற்றுப் பாடல் (23) குறிப்பிடுகின்றது . புள்ளிமான்களுக்கு மிகப் பெரிய எதிரிகள் புலியும் செந்நாயுமாகும் . புலியின் முக்கிய உணவு புள்ளி மான்கள் என்று விலங்கு நூலார் கூறுவர் .

அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை – புறம் , 23 .

நீள்வரைச் சிலம்பின் இரைவேட் டெழுந்த
வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து
வேறுவேறு கவலைய ஆறுபரிந் தலறி
உழைமான் இனநிரை யோடுங்
கழைமாய் பிறங்கன் மலையிறந் தோரே – அகம் , 249 .

புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை யணை தர வாண்குரல் விளிக்கும் – ஐங்குறு நூறு , 373 .

திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை
அரந்தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும் – அகம் , 199 .

…… வையெயிற்று
ஊனசைப் பிணவின் உறுபசி களை இயர்
காடுதேர் மடப்பிணை யலறக் கலையின்
ஒடுகுறங்கு அறுத்த செந்நா யேற்றை – அகம் , 285 .

காட்டில் மந்தையாக மேயும் மான்களில் ஒரு மானைத் தீண்டிய ஓசை கேட்டதும் உழைமான் கூட்டம் வேறு வேறு காட்டு வழிகளில் விரைந்து ஓடுவதைக் கூறும் அகப்பாடல் ( 249 ) உண்மையான காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கூறுவதைக் காணலாம் . புலியிடமிருந்து தப்பிய ஆண்மான் தன் துணையை அழைக்க ஆண்குரல் விளித்ததாகக் கூறுவதைக் காணலாம் . அகநானூற்றுப் பாடல் 199 அரிய ஒரு செய்தியைக் கூறுகின்றது . காய்ந்துபோன மரல் பூண்டை-த் தின்று கொண்டிருந்த கலைமான் கூட்டம் செந்நாய்கள் வேட்டை யாடத் தொடங்கியது கண்டு காற்றடித்துச் சிதறிய பூளைப்பஞ்சு போன்று பதறிப் பல திசைகளிலும் ஓடவே பிறகு அவைகளை ஒன்று சேர்க்கக் கலைமான் ஆண்குரல் விளித்ததாகக் கூறி யுள்ளது உண்மையான செய்தியாகவே தோன்றுகிறது . கலைமான்கள் செந்நாய்க் கூட்டத்திற்கு மிகவும் அஞ்சுமென்று விலங்கு நூலார் கூறுவர். கெடுமான் இன நிரை ” என்றது காணாமற் போன கூட்டத்தையே குறிக்கின்றது . ஆண்குரல் என்று கலைமானின் குரல் சங்க நூல்களில் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும் . கலைமான் தனது மந்தையைக் கூப்பிடும் ஆண்குரலை புலி உற்றுக் கேட்பதாகவும் அதைக் கேட்டு வேட்டையாடுவதாகவும் சங்க நூல்கள் கூறுவது வேட்டையாளர் நேரில் கண்டு கேட்ட செய்தியாகும் , வேட்டையாளர் கலைமானின் குரலைக் கேட்டு எழும் புலியின் உறுமற் குரலையும் கேட்டுப் புலி வேட்டைக்கு எழுவதுண்டு.

பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும் – அகம் , 147 .

கலைமானின் இக்குரலை ஆண்குரல் ( Belling ) என்று கூறும் வழக்கை உணராது நற்றிணை 174ஆம் பாடலில் ஆண் குரல் என்று வரும் இடத்தில் மனிதனின் குரலாகக் கொண்டனர் .

ஆளில் அத்தத் தாளம் போந்தைக்
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பிற்
புலியெதிர் வழங்கும் வளிவழங்கு ஆரிடை – நற்றிணை , 174

தாளிப்பனை காய்ந்து கிடந்த காட்டில் கலைமானின் ஆண்குரலைக் கேட்டு அதை வேட்டையாடச் செல்லும் புலி அதற்கு எதிராக உறுமுக் குரலிடும் அரிய காட்டுவழி என்று நற்றிணை கூறுகின்றது . சங்க நூலில் வழங்கும் சொல்லாட்சியை நன்றாக ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும் . செந்நாய்கள் மிகக் கொடியவை . கலைமானின் தொடையை ஓட ஓடக் கவ்விக் கிழித்ததாக அகநானூற்றுப் பாடல் 285 கூறுவதை நேரிலே கண்டு வேட்டையாளர் எழுதி யுள்ளனர் . கலைமானின் தொடையைக் கவ்வி அறுப்பதாகக் கூறியது இன்றும் காணக் கூடிய செய்தியாகும் . கலைமான்கள் தம்மினத்தைச் சேர்க்க அழைக்கக் கூப்பிடும் குரலை நன்றாகக் கேட்டுத் தெளிந்தே சங்க நூற் புலவர்கள் அதைக் குறிப்பாகக் கூறியிருக்கின்றனர் . விளிக்கும் சொல் கூப்பிடும் என்ற பொருளில் வழங்கியுள்ளது . இச் சொல் இன்றும் மலையாளத்தில் அதே பொருளில் பேச்சு வழக்கில் வழங்குகின்றது . கலைமான் பெண்மானிற்கு வெயில் காலத்தில் மரங்கள் வாடிய , காய்ந்த , சூழ்நிலையில் தான் நின்று நிழலைத் தந்ததாகவும் தெளிந்த நீரை விரும்பிப் பருகுவதாகவும் பாடியுள்ளனர் .

கொழுங் கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ வுயிர்ப்பி னீக்கித்
தெள்ள றல் பருகிய திரிமருப் பெழிற்கலை
புள்ளியம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் . 184

நீரை மூடியுள்ள வீழ்ந்த முல்லைப்பூவை மூச்சுக்காற்றால் நீக்கித் தெளிந்த நீரைப் பருகும் கலைமான் என்று கூறியதைக் கவனிக்க வேண்டும் . கலைமானை விலங்கு நூலார் Axis Axis என்று கூறுவர். உழைமானைத் துளுமொழியில் இன்றும் உளெ என்றும் பார்ஜி ( Parji) மொழியில் உளுப் என்றும் கூறுகின்றனர். மலையாளத் தில் புள்ளிகளுடைய எலிமானை ( Mouse deer) ‘ உழாமான் என்று அழைக்கின்றனர் . தமிழில் தற்காலத்தில் உழைமான் என்ற பெயரை மறந்துவிட்டுப் புள்ளிமான் என்றும் ஆண்மானைக் லமான் என்றும் அழைக்கின்றோம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Axis Axis, deer, place, Fourth note of the gamut; by the side of

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310

குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்

பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11

பிறரிடத்துக் கழிந்த என் அழகிய அணிகலன் அணிந்த மகளின் அடிகள்

கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127

கிளை, உழை என்ற சுரங்கள் பொருந்திய, வண்டுகள் பாடும் வண்ணங்கள் கொண்ட பாலைப் பண்ணைக் கேளுங்கள்!

முனை உழை இருந்த அம் குடி சீறூர் – அகம் 367/5

காட்டரண்களின் பக்கத்தே இருந்த அழகிய குடியிருப்புகளையுடைய சிற்றூர்

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1

உழை படு மான் பிணை தீண்டலின் இழைமகள் – நற் 274/3

குன்று உழை நண்ணிய முன்றில் போகாது – நற் 379/2

பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/6

ஊழ்ப்படு முது காய் உழைஇனம் கவரும் – குறு 68/2

அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3

பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்கூஉய் – கலி 63/6

என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15

தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/11

வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/15

தோழி அவன் உழை சென்று – கலி 114/6

அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21

ஒண்நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 147/11

புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை/கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/11,12

அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7

குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/2

உழை கடல் வழங்கலும் உரியன் அதன்தலை – அகம் 190/10

செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/13

கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய – அகம் 243/4

மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – அகம் 342/5

உழை புறத்து அன்ன புள்ளி நீழல் – அகம் 379/20

வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/10

கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/5

தொல் நட்பு உடையார் தம் உழை செலினே – புறம் 223/6

உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி – புறம் 261/12

தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/13

ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2

உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11

உழைமான் இன நிரை ஓடும் – அகம் 249/18

நன் மான் உழையின் வேறுபட தோன்றி – நற் 19/4

உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/9

தழையினும் உழையின் போகான் – குறு 294/7

உழையின் பிரியின் பிரியும் – கலி 50/23

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *