Skip to content

சொல் பொருள்

(வி) 1. சுர, 2. கசி, 

2. (பெ) 1. தீமை, தீங்கு, 2. காயம் 3. உறுதல், அடைதல், 4. தொடு உணர்வு, பரிசம்,

ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஊறு: உறுதல் உடையதனை ஊறு என்றமை. (திருக். 662. பரி)

ஊறு என்பது தொடுதல் உணர்வையும், இடையூறு என்பதையும் குறிக்கும். ஊறுதலால் மணற்கேணி ஊற்று எனப்படும். ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. ஊறுகாய் ஊறுதலால் அமைந்தது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

spring, as water in a well, secrete, as saliva in mouth, ooze, percolate, harm, evil, wound, injury, gaining access to, approaching, Sense of touch

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் – குறு 267/4,5

வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்
திரட்சி அமைந்த குறிய வளையலையும் கொண்ட இளையவள்

கணவர் உவப்ப புதல்வர் பயந்து
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 600-602

தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு

சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136

(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, கசிகின்ற நீரையுடைய உயவைக்கொடி

உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41

உயர்ந்தோங்கிய (=மிக உயர்ந்த)பெரிய மலைகளை (எவ்விதத்)தீங்குமின்றி ஏறிவருதலால்

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி – மலை 330-332

(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும், 330
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,
குறையாத வலிமையுடன் (ஒன்றற்கொன்று) காயம் ஏற்படும்படியாகத் தாக்கி,

நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப – பதி 51/32

பகைவரின் இரத்தத்தால் நிறம் மாறிப்போன உன் தலைமாலையைப் பருந்துகள் உற்று அதனைக் கொத்திச் செல்ல
நேரம் பார்த்திருக்க

பருந்து ஊறு அளப்ப

பருந்து உறுதற்கு அளப்ப – ஔ.சு.து.உரை விளக்கம்

விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15

விசும்பில் பறக்கும் வழக்கத்தையுடைய பருந்து ஊன் என்று கருதி அதனை உற்றுக் கவர்வதற்கு முனையும்படியாக

ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 385-388

ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும் 385
சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/14,15

சுவை, ஒலி, ஒளி, நாற்றம், ஊறு ஆகிய
ஐம்புலன்களும் நீயே! பகைவரைக் கொல்லும் போரினையுடைய அண்ணலே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “ஊறு”

 1. இராமலிங்கன் கண்ணாடிக்கலைஞர்

  வணக்கம்.
  மிகவரியதொகுப்பு
  நற்றொகுப்பு.
  வள்ளுவப்பெருந்தகை நன்கு பயன்படுத்திய அரியசொல் #ஊறு.
  மிகுநன்றியுரித்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *