Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகை கழுகு, வல்லுறு, புல்லுறு, புல்லாறு

சொல் பொருள் விளக்கம்

தலையில் குடுமி கொண்டிருக்கும் ஆண்கழுகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Brown Lizard Hawk,  Crested Gos Hawk, Hodgson’s Hawk-eagle, Rufous Bellied Hawk-eagle or Crested Hawk-eagle.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப; – அகநானூறு 103

நிழல் இல்லாத நிலப்பரப்பு. வல்லூறுப் பறவையின் ஆண் தன் கதிர் மயிர் கொண்ட தலையைச் சாய்த்து இறையைக் குறி பார்க்கும். நுண்ணிய சிவந்த நாக்கினையும், பல பொறிகளையும் உடைய குறும்பூழ் சேவல் பாதுகாப்பான இடத்தைத் தேடும்.  

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 
– குறுந்தொகை 151

நெஞ்சே! ஆண் வங்காப் பறவை பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்த, சிவந்த காலையுடைய பெண் வங்காப்பறவையைத் தனக்கு இரையாகக் கொள்ளும் பொருட்டு,  புல்லூறு என்னும் பறவை, அதனை நெருங்கி அதன்மேல் விழுந்ததால், தன்னுடைய  கணவனாகிய ஆண்பறவையை, குழலிசை போன்ற குரலோடு குறிய பல ஒலிகளால், பெண்பறவை அழைக்கும்  குன்றுகள் பொருந்திய, சிறிய வழிகளுடன் கடத்தற்கு அரிய இடம் என்று எண்ணாமல், ”மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்கியிருக்கும்பொழுது,  நான் அவளை விட்டுச் செல்வேன்.” என்று நீ துணிவது,  நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.

வீயா யாணர் நின்வயினானே
தாவாதாகும், மலி பெறு வயவே;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று,
பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் 5
யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார்,
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவைப் பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய; 10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட;
குருதிச் செம் புனல் ஒழுக;
செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே! – பதிற்றுப்பத்து 36

சேரலின் வென்றிச் சிறப்பு கூறும் பாடல் இது. அழிவில்லாத புதுவரவுகள் உன்னிடம் மேலும் மேலும் குவிகின்றன. உன் வலிமை குன்றுவதே இல்லை. நாட்டில் வளம் பெருகவேண்டும் என்பதற்காக நீ போரிடுகின்றாய். வம்புக்கு இழுத்தவர்களுடன் போரிடுகின்றாய். வெற்றியும் காண்கிறாய். போர் வலிமை மிக்க மறவர்களுடன் சென்று வெற்றி பெறுகிறாய். பனைமரம் தடித்துக் கிடக்கும் காட்டில் போரிடுகின்றாய். வாட்போரில் பகைவர் யானைகள் கைகள் துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன. விலங்குகளும், மக்களும் பிணமாகிக் கிடக்கின்றன. எருவை, எழால் பறவைகள் அவற்றை உண்கின்றன. கூளிப் பேய்கள் உண்டு மகிழ்ந்து ஆடுகின்றன. குருதி வெள்ளம் ஓடும் பல போர்களில் வெற்றி காண்பவன் நீ. 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *