Skip to content
ஐயவி

ஐயவி என்பது வெண்கடுகு ஆகும்

1. சொல் பொருள்

(பெ) 1. வெண்கடுகு, 2. கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் மரம், கோட்டைக் கதவை மூடித் தாழ்பாள் போடும் மரம்(துலாமரம்),  3. குறிஞ்சி நிலப் பயிர்களில் ஒன்று, 4. ஆரல்மீன் முட்டை, 5. ஒரு நிறை, 6. அம்புகளின் கட்டு, 7. கடுக்காய் 

2. சொல் பொருள் விளக்கம்

கடுகின் வகைகள் – கருங்கடுகு, வெண்கடுகு, கேழ்க்கடுகு(பழுப்புநிறக் கடுகு) இக்காலத்தில் தாளிக்கப் பயன்படுகிறது.

வெண்கடுகு, நெடிய தண்டையுடைய இந்தப் பயிர், குறிஞ்சிநிலத்துத் தோரைநெல், வெண்ணெல் ஆகியவற்றுடன் பின்னிப்
பிணைந்து வளரும். ஞாழல் மலர் போல பூக்கும். எண்ணெய் தரும் வித்து

  • போரில் அடிபட்டு வீடு திரும்பும் வீரரை காக்கும் பொருள்
  • அரண்மனை மதில் கதவு எளிதாகச் சுழல ஐயவி எண்ணெய் அப்பியிருந்தனர்
  • குழந்தை பெற்ற தாயை ஐயவி பூசி நீராட்டுவர்
  • போரின்போது சமாதான அடையாளமாக ஐயவி புகைப்பர்
  • இழவு வீட்டில் ஐயவி சிதறுவர்
  • குழந்தை பெற்ற தாய்க்கு ஐயவிப் புகை காட்டுவர்
  • குழந்தையின் தலை உச்சியில் வெண்கடுகினை அப்புவர்
  • கோயில் தூண்களில் உள்ள தெய்வங்களுக்கு எண்ணெய் தடவி அதன் மேல் வெண்கடுகினை அப்புவர்
  • தவம் செய்வோர் ஐயவிப் புகையைக் கைவிட்டது போலக் காதலன் தன்னைக் கைவிட்டான் என்கிறாள் ஒரு தலைவி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

white mustard, Sinapis alba, Brassica alba.

Upright bar for the gate of a fort

A weight, Bundle of arrows

ஐயவி
வெண்கடுகு

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 286-288

நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,

சின்னஞ்சிறிய ஞாழல் பூவினைப்போல் இருக்கும்

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1

வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்

இதனை அரைத்து வாசலில் பூசினால் தீங்கான சக்திகள் அணுகா என்பது நம்பிக்கை

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86

வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய

குழந்தை பெற்ற மகளிர் இதனை அரைத்துப்பூசி எண்ணெய்தேய்த்துக் குளிப்பர்

வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/5-9

நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க

போரில் காயம்பட்டு வீட்டில் படுத்திருப்போனைத் தீய ஆவியினின்றும் காக்க அவனைச் சுற்றி ஐயவியைத் தூவி விடுவர்.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ – புறம் 281/ 1- 7

இனிய கனிகளையுடைய இரவமரத் தழைகளுடன், வேப்பிலையையும் வீட்டு நிலையில் செருகிவைத்து
வளைந்த கொம்பையுடைய யாழும் பல இன்னிசைக் கருவிகளும் முழங்க
கையை மெல்ல எடுத்து மையினைத் தடவி
வெண்கடுகைத் தூவிவிட்டு, ஆம்பல் குழகை ஊதி
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப் பண்ணைப் பாடி,
நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து
காப்போமாக,வருக.

பூணா ஐயவி தூக்கிய மதில – பதி 16/4

பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - திரு 228

குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி/ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி - மது 287,288

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 86

ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் - மலை 123

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி - நற் 40/7

நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் - நற் 370/3

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - குறு 50/1

பூணாஐயவி தூக்கிய மதில - பதி 16/4

வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி/கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 22/23,24

நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென - புறம் 98/15

ஐயவி சிதறி ஆம்பல் ஊதி - புறம் 281/4

நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் - புறம் 296/2

ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - புறம் 342/9

ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் - புறம் 358/4

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - திரு 228

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 86

ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் - மது:15/213

ஐயவி அப்பிய நெய் அணி முச்சி - மணி:3/134

அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை - மணி:7/73

திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே - சிந்தா:1 113/4

அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது - சிந்தா:13 2983/2

ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி - பால:22 18/3

அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி - 3.இலை:3 27/1

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் - 6.வம்பறா:1 39/1

ஐயவி அனைத்தும் ஆற்றியது இல் என - நரவாண:5/36
வெண்கடுகு
வெண்கடுகு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *