Skip to content
கங்கன்

கங்கன் என்பவன் ஒரு சங்ககாலச் சிற்றரசன்.

1. சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன்.

2. சொல் பொருள் விளக்கம்

நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு. கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு. “வரப்பில் கங்கு வெட்டினான்” என்னும்போது ‘கங்கு’ என்னும் சொல் ‘ஓரம்’ என்னும் பொருளைத் தருகிறது. கங்கன் தமிழகத்தின் கங்கில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன்.

கங்கர் என்பவர்கள் சங்க காலக் கங்கன் வழியில் வந்த மேலைக் கங்கர் மரபினர் ஆவார். மேலைக் கங்கர்கள், பழங்கால கருநாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும். கீழைக் கங்கர் என்பவர்கள் கலிங்கத்தை ஆண்ட அரச மரபினர் ஆவர். இவர்களை மழவர் என்று கூறுவாரும் உளர்.

கங்கர்
கங்கர்

சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கங்கன் என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஒடியவர்களில் இந்தக் கங்கனும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். கங்கன் உட்பட சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள் என்பார் நாட்டார் தம் உரையில்.

அமராபரணன் சீயகங்கன் (இயற் பெயர் : திருவேகம்பமுடையான்) எனபவர் கங்கர் பரம்பரையில் வந்த ஓர் அரசன். சங்க காலக் கங்கன் வழியில் வந்த மேலைக் கங்கர் மரபினர் ஆவார். சீயகங்கன் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றக் காரணமாக இருந்தவன். நன்னூல் இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவரையும், இந்தப் பவணந்தியார் காலத்திலேயே நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரையும் பேணிப் பாதுகாத்தவன்.

குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
தொகைவகை விரியில் தருகெனத் துன்னார்
இகலற நூறி இருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே – நன்னூல் பாயிரம்

சொல் காப்பியத்தின் குண தோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப்பியம் கற்க நீண்டததனைச் சுருக்கி இசை
ஒல்காப் பெரும் பவணந்தி என்றோதி உபகரித்த
வல் காவலன் சீயகங்கனும் தான் கொங்கு மண்டலமே. – கொங்கு மண்டல சதகம் 46

கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றி வளர்
கொங்கில் குறும்புதனில் ஆதிநாதகுரு விளங்கும்
மங்குற் பொழிற் சனகாபுரமும் கொங்கு மண்டலமே. – கொங்கு மண்டல சதகம் 47

கங்கன்
கங்கன்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period, Early king of Ganga dynasty(Western Ganga dynasty), Eastern Ganga dynasty)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டம் கட்புலம் பிரியாது – சிலம்பு 25 : 156-159

இப்போரில் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் ஆகிய பல நாட்டு வீரர்கள் போர் செய்தது கூறப்படுகிறது. இதில் கூறப்பட்ட பங்களர், கட்டியர், கங்கர் என்பவர்கள் அக்காலத்துத் தமிழகத்தின் எல்லைப் புறத்தில் இருந்தவராவர்

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்
சிங்களாதிபர் சேரலர் தென்னவர்
அங்கராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோழர் மராடரே

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்
ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்
சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்
சோன சேகர் துருக்கர் குருக்களே

ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்
சேதிராசர் தெலுங்கர் கருநடர்
ஆதிவானம் கவித்த அவனிவாழ்
சோதி நீள்முடி மன்னரும் துன்னினார் —பால காண்டம், கம்ப ராமாயணம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *