Skip to content

சொல் பொருள்

(வி) 1. துரத்து, ஓட்டு,

 (பெ) 1. காவல்,  2. பேய்,  3. சிறப்பு, 4. அச்சம்,, 5. வாசனை, நறுமணம், 6. அடிக்குரல் ஓசை, 7. மிகுதி, 8. பூசை, தொழுதல், 9. திருமணம்,  10. புதுமை, 11. குறுந்தடி, 12. விரைவு,

சொல் பொருள் விளக்கம்

துரத்து, ஓட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

protection, evil spirit, beauty, excellence, fear, fragrance, scent, sonorousness, abundant, plenty, prayer, worship, wedding, newness, freshness, short stick to beat drums, speed, swiftness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291

தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,

அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187

சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்

ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 35,36

துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)

அரும் கடி மா மலை தழீஇ – மது 301

பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்)

அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611

அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,

கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 76

நாறுகரந்தை, காட்டு மல்லிகைப்பூ, நறுமணம் கமழும் தழைத்த மாம்பூ,

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10

அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்

மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1

மழையும் மிகுதியாகப் பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/8,9

பரப்பி விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து
மெய்யை உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து

சுடு பொன் அன்ன கொன்றை சூடி
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/2,3

நெருப்பில் சுட்ட பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு
திருமண வீட்டில் நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது.

கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16

புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்,

எடுத்தேறு ஏய கடி புடை அதிரும்
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/1,2

போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
தோலால் போர்த்தப்பட்ட முரசின் முகப்பு அதிர்வதைப் போன்ற

எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5

எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்துவோம், உமக்குப் பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *