1. சொல் பொருள்
(பெ) ஆள் காட்டிக் குருவி.
2. சொல் பொருள் விளக்கம்
சங்க இலக்கியத்தில் கணந்துள் என்ற பெயருடைய பறவையைப் பற்றி இரு பாடல்கள் கூறுகின்றன. இக்குருவிகள் முட்டையிட்ட காலத்திலேயோ குஞ்சு பொரித்துள்ள காலத்திலேயோ இவை வாழுமிடத்தருகில் விலங்குகளோ மனிதரோ சென்றால் திரும்பத் திரும்பக் கடுங்குரலிட்டுச் , சுற்றிசுற்றிப் பறந்து பாய்ந்து ஆரவாரம் செய்யும்.
இந்த ஆள் காட்டிக் குருவிகளுக்கும். இதன் இனமான பறவைகளுக்கும் கால்கள் நீளம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Yellow wattled lapwing, Red wattled lapwing
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ
ஆற்றய லிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையுடைக் கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. – குறுந்தொகை 350
தோழி! வாழி! நான் கூறுவதைக் கேட்பாயாக! வழிப் பக்கத்தில், பெரிய கூட்டமாக இருந்த, அழகிய சிறகுகளையும் நெடிய கால்களையும் உடைய கணந்துள் பறவைகள், தமக்கு ஊறு விளைக்கும் வேட்டுவ மக்கள் உள்ளதை அறிவுறுத்தி, வழிப்போக்கர்களது படைத்திரளை அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும். அத்தகைய மலையையுடைய காட்டைக் கடந்து, நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்து சென்றோர், அவர் பிரியுங்காலத்து, அவர் முன்னே நின்று, ” நாம் பனிக் காலத்தில் தாங்க முடியாத கடுந்துயர் அடைவோம். எம்மைப் பிரிந்து செல்லாதீர்”என்று முன்பே கூறியிருந்தால், அவர் சென்றிருப்பாரோ?
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
5
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின்
வந்தனர்; வாழி தோழி! கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. – நற்றிணை 212
பார்வை வேட்டுவன் தான் பழக்கி வைத்திருக்கும் பெண் பறவையை வைத்து மயக்கி ஆண் பறவைகளைத் தன் வலைக்குள் விழச்செய்து பிடித்துக்கொள்வான். இப்படிப்பட்ட வலையில் கணத்துள் என்னும் பறவை விழுந்து புலம்பி ஒலி எழுப்பிற்று. காட்டு வழியில் செல்லும் கோடியர் யாழ் நரம்பில் இசை எழுப்புவர். இந்த இசை போலக் கணத்துள்-பறவை ஒலி கேட்டது. அந்தப் பெருமலை வழியில் கடுமையான ஓசை எழுப்பும் பம்பை, வேட்டைநாய் ஆகியவற்றுடன் வடுகர் வேட்டைக்குச் செல்வர். இப்படிப்பட்ட வழியில் பொருள் ஈட்டச் சென்ற என் கணவர் வந்துவிட்டார்.
தோழி! கேள்.
கையில் பொன்னால் செய்த கழல்தொடி அணிந்திருக்கும் என் மகன் என்னை அணைத்துக்கொண்டு இனிமையாகப் பேசும்போதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டிருந்த நான் நேரில் கண்டு மகிழும்படி அவர் வந்துவிட்டார்.
தலைவி மகிழ்ச்சியுடன் பலரும் அறியக் கூறும் சொற்கள் இவை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது