கலவை என்பது குழம்பு
1. சொல் பொருள்
(பெ) 1. குழம்பு, அரை திரவ நிலையில் (கூழ்ம நிலை) உள்ள பொருளைக் குறிக்கிறது, 2. பல பொருட்கள் கலந்து செய்யப்படுவது கலவை, 3. குழைவுத் தன்மை
2. சொல் பொருள் விளக்கம்
ஒருசில பண்டங்களை ஒன்றாகச் சேர்த்துக் குழைவாகச் செய்தால் கிடைப்பதே கலவை. அது உணவுப்பொருள் ஆகவும் இருக்கலாம். வேறு ஏதேனும் பொருள் ஆகவும் இருக்கலாம்.
தமிழகத்தில் சோற்றுடன் உண்ணப்படும் காய்கறி அல்லது இறைச்சி கலந்த சாறு, குழம்பு என்று அழைக்கப்படுகிறது. வத்தல் குழம்பு, மிளகு குழம்பு, காரக்குழம்பு, மோர் குழம்பு, தக்காளி குழம்பு, பூண்டுக்குழம்பு, கத்திரிக்காய்க் குழம்பு
வாழைக்காய்க் குழம்பு, வெண்டைக்காய்க் குழம்பு, முட்டைக் குழம்பு, மீன் குழம்பு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
mixture
a watery dish based on a broth made with tamarind, a blend of spices that include ground coriander seeds, fenugreek
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறுபாண். 193-195
பரிசில் வேண்டி, ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைத் தேடிச் செல்லும் சிறுபாணன், செல்கிற வழியில் மருத வயல்களின் உழவர் வீடுகளின் உபசரிப்பைப் பெறும் விதத்தைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார். உலக்கையால் நெல்லைக் குத்திப் பெற்ற அரிசியினாற் செய்த பெருமளவு சோற்றை, நண்டுக் கலவையுடன் அவர்கள் பெறுவார்களாம்.
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று – பதிற்றுப்பத்து 10: 8-10
மன்னன் சேரலாதன் பகைவரின் கோட்டைக்கே சென்று, மதில் மேலிருப்போர் மீது வேல் எய்தி அவரைக் கொன்று கோட்டையைக் கைப்பற்றுவதாகப் புலவர் குமட்டூர்க் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விவரிக்கிறார். பகைவரின் மார்பினின்றும் கொட்டிய குருதி அகழிநீரில் விழுந்ததினால், அகழியின் நீல நிற நீர் குங்குமச் சேறு போல ஆகிவிட்டதாம்.
மனாலம் என்பது குங்குமம். குங்குமத்தைக் குழைத்து மேனியில் இட்டுக்கொள்வர். அந்தக் குங்குமக் குழைசேற்றை மனாலக் கலவை என்கிறார் புலவர்.
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க்கலவை போல
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல் – பரி 7: 20-22
வழக்கமாக நறுமண மலர்களின் நல்ல வாசத்துடன் வரும் வைகை, வெள்ளம் வரும்போது புதுவித மணத்துடன் வருவதாகப்
பரிபாடல் கூறுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது