Skip to content
களவு

களவு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது.இதன் பொருள்உள்ளத்தைக் கவர்தல்,திருட்டு.

1. சொல் பொருள்

உள்ளத்தைக் கவர்தல்

திருட்டு

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

  1. robbery, theft
  2. stolen property

3. சொல் பொருள் விளக்கம்

பிறர்க்கு உரிமைப்பட்ட ஒன்றை அவரறியாமல் வஞ்சித்துக் கவர்ந்து கொள்வதே களவாம். இப்பொல்லாக் களவினைத் தவிர்த்து உலகில் பெருக வழங்கும் களவும் உண்டு. அது நல்ல களவென நாடு கொள்வது. அதனையே தொல்காப்பியம் திருக்குறள் முதலியன ‘களவியல்’ எனக் கூறும். அக்களவு, ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்தலாம். பால் ஒன்று பட்டால் நட்பாகவும், பால் வேறுபட்டால் காதலாகவும் கொள்ளப்படும். கற்புக்கு முற்பட்டது இது என்பது தமிழ் நெறி. இறைவனை அடியார்கள் ‘உள்ளங் கவர் கள்வன்’. என்பது களவே. அக்களவே இறையன்பாம்.

இதற்கு பிறர்க்குரிய பொருளை மறையில் கோடல் (பிறர் அறியாது கொள்ளுதல்) என்று பொருள் கூறுவர் இளம்பூரணர். தமக்கு உறவு அல்லாத ஒரு பெண்ணை அவளது உறவினர் கொடுக்கக் கொள்ளாது, கேட்டுப் பெறாது பெண்ணின் விருப்பத்தோடு யாரும் அறியாமல் கூடி, பின்னும் அந்நிலை வழாஅமல் வாழ்தல் களவு என அகப்பொருளில் வழங்குகிறது.

இது தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் மறைமுகக் காதல் வாழ்க்கை. அது இயற்கையாய்த் தொடங்கி, தொடர்ந்து நிகழ்வது.

களவு முறையிலேயே அன்பு கலந்த காதல் வாழ்க்கையைத் தொடர முடியாத சூழலில் – அதனைத் தலைமக்கள் கற்பு வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் கொள்வர். வரைவு என்னும் திருமணம் மூலம் இது கற்பாக மலரும்.

ஊழ் கூட்டுவிக்க ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனும் தலைவியும் சந்தித்துக் காதல் கொண்டு தொடர்வது இவ்வாழ்க்கை ஆகும்.

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

4. பயன்பாடு

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு 
அடியவர்க்கு எளியான் நம் 
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் 
கசிந்து உணர்ந்து இருந்தேயும் 
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் 
செய்ததும் இலை நெஞ்சே 
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை 
பரகதி புகுவானே. 39 

8 -ஆம் திருமுறை   8.105.04  திருச்சதகம் – IV ஆன்ம சுத்தி (35)

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும் – குறள் 283

களவு செய்து பொருள்‌ கொள்வதால்‌ உண்டாகிய ஆக்கம்‌ பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும்‌ கடந்து கெட்டுவிடும்‌.

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்.
49

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப.

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்
வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே.

தொல்காப்பியம் – களவியல்

என்று களவின் தொடக்கத்தைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. இதை இயற்கைப் புணர்ச்சி என்பர். இதன்மேலும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என இது தொடரும்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *