Skip to content

சொல் பொருள்

(பெ) சேர நாட்டின் ஒரு அரச வழியினன்,

சொல் பொருள் விளக்கம்

சேரநாடு, குட்ட நாடு, குடநாடு, பொறைநாடு எனப் பல நாடுகளாகப் பிரிந்து தனித்தனியே சேரர் குடியில்
தோன்றிய அரசர்களால் ஆட்சி செய்யப்படினும், அவருள் வழிமுறைத் தோற்றத்தால் உரியவன் முடிவேந்தனாக
ஏனையோர் அவன் வழி அரசராய் ஆட்சிபுரிவர். குட்டுவன் முடிவேந்தனாயின், குடக்கோவும், இரும்பொறையும்
வழியரசராவர். குடக்கோ முடிக்குரியனாயின் குட்டுவர் கோவும் பொறையர் கோவும் வழியரசராவர்.

– ஔவை.சு.து.விளக்கம் – ஐங். பாடல் குறிப்புரையில்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one of the kings on the chera line of descent.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே – சிறு 47-50

மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் – பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்;
– இமயமலையில் விற்கொடிச் சின்னம் பொறித்தவன் என்பதால் இக் குட்டுவன் சேரன் செங்குட்டுவன்
ஆதல் வேண்டும்.

குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியல்
மதில் தீ வேட்ட ஞாட்பினும் – நற் 14/3-5

பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அகப்பா என்னும் நகரை அழித்து, அங்கே செம்பினால் இயன்றுள்ள
மதிலைத் தீயிட்டு அழித்த போரில் எழுந்த ஆரவாரத்திலும்
– இவன் பல்யானைச்செல்கெழுகுட்டுவன். இவன் அகப்பா என்னும் நகரை அழித்த செய்தி
பதிற்றுப்பத்து 22-ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/4,5

கடிய பெரிய யானைப்படையும் நெடிய தேர்ப்படையும் உள்ள குட்டுவன்
பகை வேந்தரை வென்று கொண்ட களத்தின்கண் முரசு அறைந்தது போல
– இவனைக் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் என்பதும் வழக்கு என்பார் ஔ.சு.து.அவர்கள்.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றிய செய்திகளைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து குறிப்பிடுகிறது.
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் இவனைத் தன் பதிகத்தில் கண்ணகிக்குச் சிலையெடுத்து வழிபட்ட
சேரன் செங்குட்டுவன் எனக் குறிப்பிட்டுள்ளார். பாடலில் இவன் இமயம் முதல் குமரி வரை ஆண்டான்
என்னும் குறிப்பு உள்ளது.

செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன – ஐங் 178/3

செவ்வியமுறைமையினையுடைய
குட்டுவன் என்னும் சேர மன்னற்குரிய தொண்டிநகர் போலும்
இந்தக் குட்டுவன் சேரமானாய் மணிமுடியும் எழுமுடி கெழீஇய திருவும் உடையனாய் விளங்கினமையின்
பொறை நாட்டுத் தொண்டியைச் செங்கோல் குட்டுவன் தொண்டி என்று சிறப்பித்தார்.
– ஔ.சு.து.விளக்கம்

கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய
வெல் புகழ் குட்டுவன் கண்டோர் – பதி 46/11-13

சங்குகள் முழங்கும் கடல் கலங்கும்படி, வேற்படையைச் செலுத்தி,
எழுந்து உடையும் அலைகளையுடைய நீர்ப்பரப்பாகிய ஒலிக்கின்ற கடலில் பகைவரைத் தோற்றோடச் செய்த
வெற்றியால் கிடைக்கும் புகழை உடைய குட்டுவனைக் கண்டோர்

அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2

பகைவரோடு போரிட்டது போதும் என்று ஓயமாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும்போதெல்லாம்
பெற்று ஓயமாட்டார், பரிசிலர், களிறுகளை

கரும் சினை விறல் வேம்பு அறுத்த
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/16,17

கரிய கிளைகளையும், வலிமையினையும் உடைய வேம்பினை வெட்டி வீழ்த்திய,
மிகுந்த சினத்தைக் கொண்ட குட்டுவனைக் கண்டு வருவதற்காக
இப்பாடல்களில் குறிப்பிடப்படும்குட்டுவன் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் தலைவன் கடல்பிறக்கோட்டிய
செங்குட்டுவன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *