Skip to content
குதிர்

குதிர் – நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு,ஒரு வகை குறுமரம்,சுற்றுப் பருத்தல்

சொல் பொருள்

(பெ) 1. நெல் முதலிய தானியங்களைச் சேமிக்கும் பெரிய கூடு, 2. ஒரு வகை குறுமரம்,

சுற்றுப் பருத்தல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Large earthen receptacle for storing grain

A low shrub with sharp axillary spines, Canthium parviflorum

சொல் பொருள் விளக்கம்

  1. தவசம் போட்டு வைக்கும் குலுக்கை ஆகும். இதனைப் பழங்காலத்தவர் ‘கூடு’ என வழங்கினர். தவசம் போட்டு வைக்கும் குதிர் அடி சிறுத்து இடை பெருத்து முடிசிறுத்துத் தோன்றும்.
  2. அதுபோல் இடை சுருங்க வேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் குதிர் போல இருக்கிறாள் என்றும், குந்தாணி போல இருக்கிறாள் என்றும் உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். குதிர் என்பது இவண் இடுப்பு விரிவைக் குறித்ததென்க. அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல; ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல. The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.

களிமண்ணு, வரகு வைக்கோல் ரெண்டையும் சேர்த்து பண்ணணும். ஆறடி வரைக்கும் குதிர் செய்யலாம். ஒரு அடி அளவுக்கு உயரம் கொண்ட உருளையா செஞ்சு ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி வைக்கணும். மேலே கடைசியா வைக்கும் உருளையின் அகலம் கொஞ்சம் குறைவா கோபுர வடிவம் போல குறுகி இருக்கும். மேல் மட்டத்தை மூடுவதற்கு தட்டு போல வட்டமா மண்ணால செய்து மூடணும். மேல் மட்ட வழியாதான் நெல் கொட்டணும். குதிரின் அடியில் ஒரு சின்ன துவாரம் இருக்கும். இது வழியாதான் தேவையான நெல்ல எடுக்கக்கிட்டு தேங்கா செரட்டையும் மண்ணும் வைச்சு மூடிடணும்.

ண்ணும் கருத்துமாக விவசாயிகளின் நெல்மணிகளை நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல் பாதுகாத்து கொடுக்கும் பெட்டகமாகவும், கருவூலமாகவும்  விளங்கியவை பத்தாயம் போன்றவை

பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், நம்மை வியக்க வைக்கிறது. பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும். மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.

குதிர், பத்தாயம் இவைகளில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3,5,7,9,12 என ஒற்றைப்படையில் தான் அமைப்பார்கள்.

குதிர்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186

பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,

கரி குதிர் மரத்த கான வாழ்க்கை – அகம் 75/5

கரிந்துபோன குதிர் மரத்தினையுடைய காட்டில் வாழும் வாழ்க்கை

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை

‘எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப் பழமொழியின் நேர் பொருள் தெளிவாக உள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.

“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி ஒளிந்து கொள்வார்.

ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள் வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து குலுக்கைக்கு (குலுக்கை – நெல் கொட்டப் பயன்படும் அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன் விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’ என்று எச்சரித்து விட்டார்.

கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.

உடனே மகன் டக்கென்று “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.

சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று. இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பழமொழிக் கதைகள் வழக்கத்தில் உள்ளன. அவை பேச்சுகளை அர்த்தமுள்ளதாகவும் ஆழமாகவும் ஆக்குகின்றன என்பதில் ஐயமில்லை.

பயன்பாடு:

அவிநாசி அருகே விளைநிலத்தின் நடுவே தானியக் குதிர் கண்டுபிடிப்பு

இது ஒரு வழக்குச் சொல்

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *