சொல் பொருள்
ஆந்தையில் ஒரு வகை
சொல் பொருள் விளக்கம்
ஆந்தையில் ஒரு வகை. இது குடுமியை உடையது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male of barn owl (tyto alba)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது குடுமியை உடையது குடுமி கூகை குராலொடு முரல – மது 170 வளைந்த வாயை உடையது. பகலிலும் ஒலியெழுப்பும். வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268 ஊரின் வெளிப்புறத்தில் உள்ள மரப்பொந்துகளில் வசிக்கும். ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4,5 எமது ஊரின் நுழைவாயிலில் உள்ள ஊருணியின் துறையில், பருத்த தெய்வம் வீற்றிருக்கும் முதிய மரத்தில் இருப்பதனால் இவ்வூரில் என்னுடன் வசித்துப் பழகிய தேயாத வளைந்த அலகினையும், தெளிந்த கண்பார்வையையும், கூர்மையான நகங்களையும் கொண்ட, ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே! இரவு நேரத்தில் ஊருக்குள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரும். மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் கூகை சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/3-6 மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில் ஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும் பேய்களும் நடமாடித்திரியும் தடுமாறவைக்கும் இருளைக்கொண்ட நள்ளிரவில் ஊரை ஒட்டியுள்ள குன்றுகளில் வாழும். குன்ற கூகை குழறினும் முன்றில் பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும் அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் – குறு 153/1-3 குன்றிலுள்ள பேராந்தை குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள பலாவின் பெரிய கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும், முன்பு அஞ்சும், இரங்கற்குரியது என் நெஞ்சு பாழிடங்களில் குடியிருக்கும். கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/3 கூகைகளாகிய கோழிகளையுடைய வாகை என்னும் பாழ்வெளியில் கழன்றுவிழுவது போன்ற கண்களை உடையது. கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36 பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப பஞ்சுப்பிசிர் போன்ற மென்மையான தலையை உடையது. துய் தலை கூகை – பதி 44/18 பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகை இரவில் வீட்டு முற்றத்தில் திரியும் எலிகளைப் பிடித்துத் தின்னும். இது ஒலி எழுப்பினால் அழிவு உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு. இல் எலி வல்சி வல் வாய் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/13,14 வீட்டிலுள்ள எலிகளை இரையாகக் கொண்ட வலிய வாயையினை உடைய கூகை பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும் வயதான மரங்களிலுள்ள பொந்துகளுக்குள்ளிருந்து கூவும். முதுமரப் பொத்தில் கதுமென இயம்பும் கூகை கோழி – புறம் 364/11,12 முதிய மரப்பொந்துகளிலிருந்து கதுமெனக் கூவும் கூகைக் கோழி இதன் குரல் அழுவதுபோல் இருக்கும். அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258 கூகை என்பது ஆணுக்குப் பெயர். இதனுடைய பேடை குரால் எனப்டும். கூகை சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5 ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்