சொல் பொருள்

மிகு, உறு, அடை, பெறு, குன்னு, மிகுதியான, கூர்மை, (கைதுசெய் போன்று) பெயரை வினையாக்கும் உருபு

சொல் பொருள் விளக்கம்

மிகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be abundant, be excessive, experience, get, contract with cold, excessive, intense, sharpness, verbalizer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – சிறு 39

(தன்னை)வெறுத்தல் மிகுகின்ற வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால்

நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289

பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்

புலியொடு பொருத புண் கூர் யானை – நற் 65/5

புலியோடு போருடற்றி உடம்பெங்கும் புண்ணுற்று வருகின்ற யானை
– ஔ.சு.து.உரை

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)குன்னிப்போக

கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345

கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர்
– கூர் நறா – களிப்பு மிக்க கள், “கூர்ப்பும் கழிப்பும் உள்ளது சிறத்தல் – தொல்.உரி-16) – பொ.வே.சோ விளக்கம்

இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302

பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52

குருதியை அளைந்த கூர்மையுள்ள உகிரினையுடைய கொடிய விரலால்

எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – ஐங் 142

மணல்மேட்டிலுள்ள தாழ்வான பூங்கொத்துகள் மலர்ந்த கிளையினில்
பறவைகள் வந்து நெடும்பொழுது தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனை
நினைத்துப்பார்க்கமாட்டேன் தோழி! உறங்கிப்போகட்டும் என் கண்கள்
– இறைகூர்தல் – ஒரு சொல்லாய் இறுத்தல் என்னும் பொருளது. ஔ.சு.து.விளக்கம்
– இறை என்பதற்குத் தங்குதல் என்று பொருள் தருகிறது தமிழ்ப்பேரகராதி (Tamil Lexicon).
– இறை – தங்கல் Abiding, halting, tarrying;
– எனவே தங்கல் என்ற பெயர்ச்சொல்லை தங்கு, தங்கியிரு என்று வினையாக ஆக்குதற்கு ’கூர்’
– பயன்படுகிறது என்று கொள்ளலாம் – ’கைதுசெய், அடக்கம்செய்’ போன்று.
– இதைப் போலவே ஏனைய இடங்களும் உண்டு.

தெறல் மறவர் இறைகூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6

– ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5

– புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/4

– இங்கே புறம் 345-க்கு உரை கூறிய ஔ.சு.து.அவர்கள், ”இறுத்தல் இறை என வந்தது. இறைகூர்தல்
– என்ற தொடர் ஒரு சொல்லாய்த் தங்குதல் என்னும் பொருள் குறித்து நின்றது” என்பார்.
– ஆனால் அகராதிகள் ‘கூர்’ என்பதர்கு இப்பொருள் தரவில்லை. இது ஆய்வுக்குரியது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.