கூழ் என்பது ஒரு வகை உணவு.
1. சொல் பொருள்
(பெ) 1. உணவு, 2. ஒரு வகை உணவு, கூழ்ம நிலையிலுள்ள உணவு.
2. சொல் பொருள் விளக்கம்
கூழ் கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவு இது. இது தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
உணவுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர்
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 163
(தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/5
உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும்
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
செல்வமுடைய நல்ல இல்லங்களில் காளைகள் தம்முள் மாறுபட்டு செருக்கி முழங்குகின்ற,
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
பாதுகாப்புடன் இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
நெல்முதலிய உணவுப்பொருள்களையும் உடைய தன் தந்தையின் அகன்ற இடமுள்ள மாளிகையில்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
கொல்லையை உழும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலாக விட்டுவைத்த
கொளகொள குறைபடா கூழ் உடை வியன் நகர் – புறம் 70/7
எடுக்க எடுக்கக் குறையாத உணவினையுடைய அகன்ற மனைகளில்
பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/5
பகையாகிய செறிந்த சேற்றில் அழுந்தி
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் – புறம் 320/16
வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக்
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்/பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/14,15
பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து, அச்சத்தை விளைவிக்கும் மூளையும் நிணமுமாகிய கூழே பசிய பயிராக,.
கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20
கூழையும் சோற்றையும் விரும்பி, ஒவ்வொன்றாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது