Skip to content

சொல் பொருள்

வளை, நெறிதவறு, நடுவுநிலைமை தவறு, ஊதுகொம்பு, யானைத்தந்தம், மரக்கொம்பு, கிளை, மலை, நீர்க்கரை, சங்கு, விலங்குகளின் கொம்பு, உச்சி, மலையுச்சி, சிகரம், (பிறைநிலவின்) முனை, மேடு, பக்கம், கோல், வரி, கீற்று, கொடுமை, களைக்கொட்டு, மண் அடுப்பின் மேலுள்ள குமிழ், வளைவு, யாழின் தண்டு, நீரைப் பீய்ச்சியடிக்கும் கொம்பு, முடிச்சுருள்,

சொல் பொருள் விளக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bend, be crooked, go astray, deviate, be partial, biased; Blowing-horn, tusk, branch of a tree, mountain, Bank of a river, bund of a tank or well, conch, horn, top, Summit of a hill, peak, Cusp, horn, as of the crescent moon, high ground, elevation, side, stick, stroke, small line segment, stripe, hardship, oppression, Weeding-hook, grass-hoe, small iron pick with broad blade and wooden handle; the projections on the earthen oven, flexure, horn like part of the lute, A horn-like contrivance used for discharging water in jets; Coil of hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தோடு இடம் கோடாய் கிளர்ந்து
நீடினை விளைமோ வாழிய தினையே – நற் 251/10,11

தோடு போர்த்த கதிர் தலைசாயாய், நிமிர்ந்து
உடனே விளையாது நீட்டித்து விளைவாயாக தினையே

கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/6,7

கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும்
நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை
வழியில்

நன்று அல் காலையும் நட்பின் கோடார் – அகம் 113/1

நட்டார் ஆக்கமின்றிக் கேடுற்ற காலையும், நட்புத்தன்மையில் திரியாராய்

அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் என குணம் கொல்லாது – புறம் 55/13,14

அதனால், இவர் நம்முடையவர் எனச் செங்கோல் வளையாது (நடுவுநிலைமை தவறாது)
இவர் நமக்கு அயலார் என அவர் நற்குனங்களைக் கெடாது

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246

கொம்புகளை ஊதி, வளைவுடைய மணியை ஒலிப்பித்து

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ – திரு 304,305

பெரிய பிடியானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்
முத்தை உடைய வெண்மையான கொம்புகளை உள்ளடக்கி

குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொரு 234

கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்

கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி – பொரு 242,243

குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச்,
சூட்டை மலையாக அடுக்கி

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் – பெரும் 273,274

தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிகளையுடைய வலைஞருடைய குடியிருப்பில் தங்குவீராயின்

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401

நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த)
சுண்ணாம்பையுடையவரும்,

பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/39,40

குத்துக்களை மார்பினில் ஏற்றுக்கொண்டவரை, அவர் சாகும்படி குத்திய சிவப்பும் கருமையும் கலந்த
காளையின்
கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்!

சினை சுறவின் கோடு நட்டு – பட் 86

சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,

கோடு உயர் பிeறங்கல் மலை கிழவோனே – நற் 28/9

உச்சியையும் உயர்ந்த முடிகளையுமுடைய பெரிய மலைக்குரியனாகிய தலைமகன்

சிதலை செய்த செம் நிலை புற்றின்
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி – அகம் 112/2,3

கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது
மண்ணாற் புனைந்த நீண்ட உச்சி உடைந்திடப் பெயர்த்து

கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு – பதி 31/12

பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று

நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர – நற் 163/5

நிலவொளி போன்ற ஒளிதவழும் மணல் மேட்டின் உச்சியில் ஏறிப் போய்வர

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6

பக்கம் உயர்ந்த அல்குலையும் மெல்லியவாய்த் தோன்றிய திதலையையும்
ஔ.சு.து.உரை

அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி – நற் 372/8,9

அன்னை (மீன் உணங்கலைக் கவர வரும் புள்ளினத்தை ஓட்டுவதற்குத்) தந்த அசைகின்ற மெல்லிய கோல்
வளைந்து ஒடிந்ததற்கு வருந்துதலை அஞ்சி,
ஔ.சு.து.உரை

வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/1-4

இறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
நீரொழுகும் கண்களால் வருத்தமடையாதே! ஆய்ந்து எண்ணும் கோடுகளை இட்டு
சுவரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நின் துயரம் முற்றிலும் நீங்க
வருவேன் என்று சொன்ன பருவம் இதோ நெருங்கிவிட்டது பார்!

மரம் கோள் உமண் மகன் பெயரும் பருதி
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து – அகம் 343/4-7

வண்டியினைக் கொண்ட உப்புவாணிகனது பெயர்ந்து செல்லும் சக்கரம்
பொலிவில்லாத பூண் சிதையச் செய்த வலிய பாறையிலுள்ள நடு கல்லின்
இடப்பெற்ற மாலை வாடியதும் நீராட்டப்பெறாததுமான இடத்தில்
கூரிய உளியால் செதுக்கப்பட்ட கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள்

தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு
கோடு அற வைத்த கோடா கொள்கையும் – பதி 37/10,11

பழமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய உன் ஆட்சியின் கீழ் வாழ்பவர்க்கு இணையாக,
அவரின் மனத்திருந்த கொடுமை தீர்ந்துபோகுமாறு திருத்தி வைத்த மனக்கோட்டமற்ற கோட்பாட்டையும்

கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13

களைக்கொட்டினையுடைய கையினராய் களையினை வெட்டியெறியும் தொழிலையுடையவர்கள்
– நாட்டார் உரை

ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1

அடுதலை மிகவும் மறந்த புடை ஓங்கிய அடுப்பின்கண்
– அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பு என்றாராம் – ஔ.சு.து.உரை, விளக்கம்

இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35

இரண்டு பக்கமும் வளைவாகத் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர

கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70

கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த

நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34

நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,

அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை – கலி 72/18-20

அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ –
உன்னுடன் கூடிக் களித்த பரத்தையரின் மணங்கமழும் மாலை அழுந்தியதால் ஏற்பட்ட சுவட்டின் மேல்
நீ குறித்த இடத்தில் வந்து கூடிய பரத்தையின் முடித்த கூந்தலின் சுருளை நீ கோதிவிட்டபோது உதிர்ந்த
பூந்துகளை?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *