Skip to content

சொல் பொருள்

பிடித்துக்கொள்ளுதல், முகந்து கொள்ளுதல், பெற்றுக்கொள்ளுதல், செய்துகொள்ளுதல், உயிரைக் கொள்ளுதல், கொத்து, குலை, பாம்பு, விண்மீன், கிரகம், இடையூறு, இயல்பு, தன்மை

கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

கொள்ளப்படுவது கோள். எ-டு: குறிக்கோள், விழாக்கோள். கோள் என்பது கொண்டாட்டம் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. காவடி, பாற் குடம், வேல், முளைப்பாலிகை ஆகியவற்றைத் தலையிலும் தோளிலும் கொள்ளுதல் குறித்து வந்த சொல்லாட்சி இது. கொண்டாட்டம் என்பதும் மேற்குறித்தவற்றைக் கொண்டு ஆடுதல் வழியாக ஏற்பட்ட வழக்குச் சொல்லேயாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

holding, taking, receiving, making, seizing, bunch, cluster, serpent, star, planet, impediment, danger, nature

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 141,142

முலையைப் பிடித்து உண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,

கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236

கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,

கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 12

கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல,

வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/8,9

வளைசெய்வதில் வல்லவன்
தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்துகொள்ளுதல் நன்றாக அமைந்த ஒளிமிகுந்த வளையலையும்,

உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/7,8

நிகழ்த்தும் முறைமைகொண்ட வழக்கத்தையுடைய கூற்றுவனின்
அறமற்ற உயிர்வாங்கும் தொழிலை நன்கு அறிந்தவர்கள்.

கோள் தெங்கின் குலை வாழை – பொரு 208

கொத்துக்கொத்தான (காய்களைக் காய்க்கும்)தெங்கினையும், குலையினையுடைய வாழையினையும்,

குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384

இளைய திங்களைச் பாம்பு தீண்டினாற் போன்று

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82

நாளின் பெயர் கொண்ட கோள்(உத்தரம்) நன்றாக வடிவமைக்கப்பட்ட சிறந்த (குறுக்குக்)கட்டையைக்கொண்டு

நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/3

நாள்மீன்களும், கோள்மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும்

குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி – அகம் 271/5

குன்றுகளின் பக்கத்திலுள்ள ஊறு பொருந்திய சுரத்தினைக் கடந்து

வெண் கோள் தோன்றா குழிசியொடு – புறம் 257/12

வெண்மை நிறத் தன்மை தோன்றாத பானையுடன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *