சொல் பொருள்
(வி) சிறைப்பட்டிரு, மூடியிரு
(பெ) 1. சிறகு, 2. வரப்பு, 3. பிணிப்பு, 4. அடக்குதல், 5. பக்கம், ஓரம், 6. அணை, தடுப்பு, 7. இரண்டு பக்கங்களிலும் வீடுகளைக் கொண்ட தெருவின் ஒரு பக்கம், 8. சிறைச்சலை, 9 காவல்
சிறை – அழகு
சொல் பொருள் விளக்கம்
இச் சிறை என்பது சிறைச்சாலைப் பொருளது அன்று சிறுமைப்படுத்தி அடக்கி வைப்பது எல்லாம் சிறையெனப்படும். அவ்வகையில் பழங்கால அரண்மனைகளின் உட்பகுதியாம் அந்தப்புரம் சிறையெனப்பட்டது. வேற்று நாட்டு மகளிரைப் பற்றிக் கொண்டு வந்தும் சிறைப்படுத்தினர். அவர்கள் தங்கல் ‘வேளம்’ எனப்பட்டது. வேளகம் (விருப்பம்மிக்க இடம்) என்பதே ‘வேளம்’ ஆயிற்றாம். அந்தப்புரம், வேளகம் ஆகியவற்றில் இருந்த மகளிர் அழகுமிக்கவராக இருந்தமையால் அழகிய பெண்களைச் ‘சிறை,’ என்னும் வழக்காயிற்று. “அவள் பெரிய சிறை; அவளைத்தேடி ஆளுக்கு ஆள் போட்டி போடுவார்கள்” என்பதில் சிறை ‘அழகிய பெண்’ எனப்பொருள் தருதல் அறியலாம். அழகைத் தன்னகத்துச் சிறைப்படுத்திக் கொண்டவள் சிறையெனப்பட்டாள் என்பதுமாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
confine, restrain, wing, boundary, holding, restraint, side, edge, dam, block, one side of a street, prison, watch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1 மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள் அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76 அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246 செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம், அள்ளல் கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/8,9 சேறு நிரம்பிய கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை நிறைய பெய்த அம்பி காழோர் சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/3,4 நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள் அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும் யாரும் இல் ஒரு சிறை இருந்து பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/8,9 யாருமில்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்து பெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம். கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் சிறை அடு கடும் புனல் அன்ன – நற் 369/9,10 கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும் அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5 ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5 பிணித்தலைக் கொண்ட அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினும் வீங்கு சிறை வியல் அருப்பம் – புறம் 17/28 மிகுந்த காவலையுடைய அகன்ற அரணினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்