சொல் பொருள்
(வி) 1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு, 2. முரசடிப்பது போன்ற ஒலி எழுப்பு, 3. மழை பெய்யும்போது வானில் எழும் உறுமுகின்ற முழக்கம் போன்று ஒலித்தல், 4.ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல்
சொல் பொருள் விளக்கம்
1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make a sound as of a drunkard, make a rattling sound, make short successive sounds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரிதாகக் குடித்தவர்களின் குழறுகின்ற நாக்கு போல் ஒலி எழுப்புதல். உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669 (கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய, பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க, ‘டம டம’ என்று முரசு பெரிதாக எழுப்பும் ஓசைபோல் ஒலித்தல். ஆறலைக்களவர், வழிப்போக்கர் வரவை அறிவிக்க முரசடிப்பது போன்று ஒலித்தல் வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் – நற் 298/1-3 பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து, செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும் மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசை மணவிழாவின்போது முரசு அடிப்பது போன்று ஒலித்தல். நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் மயிர் கண் முரசினோரும் முன் உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/8-12 மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின் பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன; ஆதலால் ஒலிக்கின்ற குரலையுடைய மயிர்சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்பதற்கு முன் இவளிடம் உயிர் இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதல் அரிதே! விடிந்துவிட்டதைத் தெரிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல் தழங்கு குரல் முரசம் காலை இயம்ப கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/1,2 முழங்குகின்ற குரலில் முரசம் காலையில் ஒலிக்க, கடும் சினத்தையுடைய வேந்தன் போரை எதிர்கொண்டான்; போர் மறவர்க்கு உணவு படைக்க அழைக்கும் முரசு அடிப்பது போன்று ஒலித்தல் பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து பெரும் சோறு உகுத்தற்கு எறியும் கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44 பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால், இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க, போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது – கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம் போர்ப்பாசறையில் தங்கியிருப்போருக்கு அறிவிப்புக்கொடுக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல். இது காற்றால் அலைப்புண்ட கடலின் ஆர்ப்பரிப்பு போல் இருக்கும். கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/1-3 காற்றே குறுந்தடியாய் மோதியடிக்க, கடல் பேரொலி எழுப்புவதைப் போல பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது பாசறையில் இரவுக்காவலர் நடுயாமத்தை அறிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல். சிறு கண் யானை நெடு நா ஒண் மணி கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/13-15 சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும், கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும், முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில் இங்கு காட்டப்பட்டுள்ள முரசொலிகள் அறிவிப்பு சார்ந்தவையாகவே இருப்பதால், முரசினை ‘டம டம டம’என்று அடிக்கும்போது எழும் ஓசையே தழங்கு குரல் என்று ஆகும். மழை பெய்வதற்குச் சற்று முன் வானத்தில் எழும் உறுமுகின்ற இடிமுழக்கம். தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6 மிக்கு ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம் இதோ பெய்வதற்கு மின்னுகின்றது தோழி! மா மலை விடர்_அகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் பெயல் தொடங்கினவே பெய்யா வானம் ——————————- தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/2-9 காயா மரங்களைக் கொண்ட குன்றினில் கொன்றைப் பூக்களைப் போலப் பெரிய மலையின் பிளவிடங்கள் விளங்கித் தோன்றும்படி மின்னி மாமை நிறத்தவள் இருந்த இடத்தை நோக்கி அகன்ற கரிய விசும்பிடம் எல்லாம் மறையும்படி பரவி மழை பெய்யத் தொடங்கின, இதுவரை பெய்யாத மேகங்கள் ——————————— முழங்குகின்ற ஓசையுடன் இடி இடிக்கும் இரவுப்பொழுதில் தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/12,13 ஒலிக்கும் குரலையுடைய மேகத்தின் முதல்மழையால் ஈன்ற கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை போன்ற கிழங்கு ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல் கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 307-310 கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை, வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால், ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு, உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்; இந்தப் பிளிறல் ஓசையைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்