Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சார்பு, பக்கம், 2. வகை, விதம், 3. சிறப்பு, மேன்மை, 4. ஆற்றல், சக்தி, 5. திறமை, 6. தன்மை, இயல்பு, 7. வழிமுறை, 8. நல்லொழுக்கம், 9. வழி, 10. காரணம்

சொல் பொருள் விளக்கம்

1. சார்பு, பக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

side, party, kind, sort, greatness, excellence, power, strength, skill, efficiency, nature, quality, means, method, moral conduct, goodness of behaviour, way, path, cause

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 73-75

விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்,

நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்
பல திறம் பெயர்பவை கேட்குவிர்_மாதோ – மலை 289-291

பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்,
பலவிதமான நடமாட்டங்களை(உற்றுக்கேட்டால்) கேட்பீர்

திண் தேர் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/9,10

திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/1-4

கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
சில்வண்டு ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில்
திறமையுடன் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2

பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்

அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று – ஐங் 387/1,2

அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே!
உங்களைத் தொழுகிறேன் என்று

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/20

நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்

கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் – அகம் 14/16,17

கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக,

பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் – அகம் 48/2-4

பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “திறம்”

 1. வணக்கம் ஐயா,
  465 ஆவது குறளில் “வகை அறச் குழாது எழுதல் – சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்,” என்பதில் “ திறங்களை” என்பதன் பொருள் என்ன?

  நன்றி

 2. திறம் = தன்மை?

  https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0450_02.html

  வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
  பாத்திப் படுப்பதோ ராறு.

  வகை அறச் சூழாது எழுதல் – சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல்; பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு – அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.

  விளக்கம் [அத்திறங்களாவன: வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான், முற்றுப் பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும். இழுக்கும் கூறப்பட்டன]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *