சொல் பொருள்
1. (வி) 1. தெளிவடை, 2. மனம் தெளிவாகு, உறுதிப்படு, 3. நம்பு, 4. தெளிவாகச் சிந்தி, 5. தெளிவாக அறிந்துகொள்,
2. (பெ) 1. தெளிவு, 2. கொட்டுதல், 3. தேற்றா என்னும் மரம்,
சொல் பொருள் விளக்கம்
(வி) 1. தெளிவடை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be clarified, made clear as water, be convinced, accept as true, think clearly, know clearly, clarity, clearness, sting as of a bee, a tree called ‘therr’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97 தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும் தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/17,18 ‘தெளிவாயாக நீ! நான் தீயவன் அல்லன்’ என்று அவளின் சிறிய பாதங்களைத் தொட்டு வீழ்ந்துகிடந்தது ஒன்று போதாதோ? கல்_அக வெற்பன் சொல்லின் தேறி யாம் எம் நலன் இழந்தனமே – நற் 36/4,5 மலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி நாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்! தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20 தெளிவாக யோசித்துப்பார்த்தால், நீ கூறுவது மட்டும் அல்ல, பிற குற்றங்களையும் நான் செய்யவில்லை நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும் சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் தேறினேன் சென்றீ – கலி 93/30-33 உன்னுடைய மணங்கமழும் அகன்ற மார்பினைச் சிதைத்து அதில் வடுக்களை உண்டாக்கியவர் யார்? சொல், அவர்களுள் எவரும் சிறிதுநேரம்கூட நீ இங்குத் தங்கினால் கோபித்துக்கொள்வர், வெறுக்கத்தக்கவனே! உன்னை நன்றாகத் தெரிந்துகொண்டேன்! நீ செல்வாயாக! யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14 ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில், உம் நிலைத்த அன்பு என்னும் தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாற்றத்தோடு மாண்டுபோகவோ? கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6 கடுமையாகக் கொட்டுதலைச் செய்யும் கூட்டமான குளவிகள் மொய்த்தவாறு தங்கியிருக்கும் நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200 மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்