Skip to content

1. சொல் பொருள்

(பெ) நெட்டையான சாம்பல் நிறமான பறவையாகும், 

2. சொல் பொருள் விளக்கம்

நாரையென்ற பெயரே நரை என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் . நரை என்ற சொல் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தைக் குறித்துச் சங்க காலத்தில் வழங்கிற்று . நரைமயிர் என்ற வழக்கைக் காண்க .

நெட்டையான சாம்பல் நிறமான பறவையாகும் . தலையும் கழுத்தும் வெண்மையாகக் காணப்படும் . உடல் சாம்பல் நிறமாகத் தெரியும். பெரும்பாலும் தனியாக நிற்கும் . சிறு கூட்டமாகவும் நீர் நிலைகளில் காண்பதுண்டு . நீண்ட கால்களும் நீண்ட
கழுத்தும் இந்தப் பறவையை நெட்டையாகக் காட்டுகின்றது.

நாரையை நீர் நிலைகளில் முக்கியமாக கடற்கரைக் கழிகளில் எளிதில் பார்க்கலாம்.

தடந்தாள் நாரையென்று இந்த நாரை அழைக்கப்படுவதைக் காணலாம் . வளைந்த காலையுடைய நாரை என்று கூறியுள்ளனர் . ஆனால் , தட என்ற சொல் பெருமைப் பொருளுமுடைய தால் பெரிய நீண்ட காலையுடைய நாரை என்று பொருள் கொள்வதே பொருத்தமானது.

கடற்கரைக் கழிகளிலும் பொய்கைகளிலும் , மருத நிலத்துக் கழனிகளிலும் , பழனங்களிலும் கண்டு பாடியுள்ளனர் . கழனி நாரை , பழன நாரை என்றும் அழைக்கின்றனர் . நாரைகள் அயிரை, கயல் , வாளை , இறா முதலிய பல மீன்களையும் உண்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.

நற்றிணை 91 ஆம் பாடலில் நாரை சிறிய கண்ணையுடைய சிவந்த வால் பாகத்தையுடைய மீனைத் தின்றதாகக் கூறியுள்ளதைக் காணலாம் .நாரை கூடுகட்டி வாழ்வதும் குஞ்சுகளுக்கு இரை தேடித் தருவதும் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளன.

நாரை புன்னைமரத்திலும் , பனைமரத்திலும் , ஞாழல் மரத்திலும் , கடற்கரை யோரத்தில் தங்குவதாகக் கூ.றியுள்ளனர் . நாரைகள் மருத நிலத்தில் மருத மரத்திலும் பலா மரத்திலும் கூடுகட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

பொய்கையில் வாளை மீனை உண்ணப்போன நாரை தன் அடிகளின் ஓசையை மீன்கள் உணர்ந்து கொள்ளுமென்று அஞ்சி மெது மெதுவாக அடியெடுத்து வைத்துச் செல்லுமென்று அகநானூறு கூறுவது

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Grey Heron, Eastern grey heron, Ardea Cinerea rectirostris, Eastern purple Heron

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம்
கொள்வாம் என்றி தோழி கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்தவை தாவென் சொல்லினும்
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. 
– குறுந்தொகை 349

அடும்பங் கொடியில் மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து,  மீனை உண்ணுகின்ற வளைந்த கால்களையுடைய நாரை தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய, குளிர்ந்த நீர்த்துறைத் தலைவனை வளைத்து, நாம் இழந்த பெண்மை நலத்தைப் திரும்பப் பெறுவோம்” என்று கூறுகின்றாய்!  சரி, அவ்வாறே செய்வோம்.  ஆனால், தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி,  நம்மிடம் இரப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து, பிறகு, அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித் தருக என்று சொல்லுதலைக் காட்டிலும்,  நமது இனிய உயிரை இழத்தல், துன்பமுடையதாகுமோ? ஆகாது.

கடல் சேர் கானல் குட புலம் முன்னி,

வல் துழந்த தடந் தாள் நாரை – பதிற்றுப்பத்து 51

விரிந்த கடல் பரப்பில் காற்று போரிடுவதால் அலை இடி போல முழங்கும். இப்படிப்பட்ட கடல் சேர்ந்த கானல்-நிலம் கொண்டது குடபுலம். இந்தக் குடபுலம் நோக்கித் தன் வலிமையெல்லாம் பயன்படுத்திப் பறந்துவந்த அகன்ற காலடிகளைக் கொண்ட நாரை அங்குள்ள ஞாழல் மரத்தில் தங்கும்.

அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி,

வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும்,

முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த

தடந் தாள் நாரை இரிய; அயிரைக்

கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின் – பதிற்றுப்பத்து 29

வயலோர வீடு. வாழை மரத்துக்குப் பக்கத்தில் உரல். புது நெல்லைப் போட்டு மகளிர் வளையல் குலுங்க அவல் இடித்துக்கொண்டிருப்பர். வளைந்த கதிர் விட்டு நெல் விளைந்திருக்கும். அந்த வயல்நீரில் மேயும் கொழுத்த அயிரை மீன்களை மேய்வதற்காக நாரைப் பறவைகள் வரும்.

தடந் தாள் நாரை படிந்து இரை கவரும்,

முடந்தை நெல்லின் கழை அமல், கழனி, – பதிற்றுப்பத்து 32

விரிந்த கால்களை உடைய நாரை மீன் இரை கொள்ளும் நீர்வளம் மிக்க நாடு அது.

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து -நற்றிணை 127

நாரை உப்பங்கழியில் நுழைந்து இரை தேடும். அப்போது நனைந்த அதன் சிறகுகளை மேட்டுக்கு வந்து உதறும். நீர்த்திவலைகள் சிதறும். 

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் – நற்றிணை 180

வயலில் படர்ந்திருந்த பாகல் கொடியில் முயிறு கூடு கட்டி முட்டையிட்டு வைத்திருக்கும். வயலில் மேயும்போது நாரையின் உடல் அதன் மேல் உரசினால் என்ன ஆகும். முயிற்றுக் கூட்டிலிருக்கும் முட்டைகள் கொட்டும். நெல்லரிசி கொட்டுவது போல முட்டைகள் கொட்டும். அப்படிக் கொட்டும் வயல்நிலத்தின் தலைவன் ஊரன். 

கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,

முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் – நற்றிணை 263

கருவுற்றிருக்கும் பெண்நாரை பறந்து செல்ல முடியாமல் கடல் மீனை உண்ணும் ஆசையோடு வயலிலேயே இருக்கும்போது, வளைந்த கழுத்தினை உடைய முதிர்ந்த அதன் ஆண்நாரை கடல் மீனைக் கொண்டுவந்து கருவுற்றிருக்கும் தன் பெண்நாரைக்குக் கொடுக்கும் 

பழனப் பல் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் நின் பெண்டிர்:
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே.- ஐங்குறுநூறு 70

வயலில் மேயும் மீன்களை அருந்துவதற்காக நாரை வயலோரம் உள்ள மருதமர உச்சியில் அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட வயலும், அதற்கு நீர் தரும் பொய்கையும் கொண்ட ஊரை உடையவன் நீ. நீ வைத்திருக்கும் பெண்கள் தூய்மையானவர்கள். அத்துடன் நல்லவர்களும்-கூட [நறியர் = நல்லவர்]. நான் பேய். உன் மகனைப் பெற்றிருக்கும் பேய். – இப்படிச் சொல்லி மனைவி ஊடுகிறாள்.

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.
– குறுந்தொகை 114

நன்கு செய்யப்பட்டதேரை உடைய நெய்தல் நிலத்தலைவ!  நெய்தல் நிலப்பரப்பில், எனது பாவையைப் படுக்கவைத்துவிட்டு, நீ இருக்குமிடத்து வந்தேன்.  இரவு வந்தவுடன்  ஆரல் மீனை உண்டதால், நிறைந்த வயிற்றை உடைய நாரைகள், என் மகளாகிய அப்பாவையின் நெற்றியை மிதிக்கும். ஆதலின், நான் அங்கே போகின்றேன்; தலைவியைச் சந்தித்து அளவளாவிய  பிறகு அவளை அங்கே போகும்படி நீ அனுப்பிவைப்பாயாக!

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 
– குறுந்தொகை 128

நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப் பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில் உள்ளவளும் எளிதில் அடைய முடியாத  அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. 
– குறுந்தொகை 166

குளிர்ந்த கடலில் தோன்றும் அலைகள் மீன்களைப் இடம்பெயரச் செய்வதால்,  வெண்மையான சிறகுகளையுடைய நாரையின் கூட்டம் அங்கிருந்து  பெயர்ந்து அயிரை மீன்கள் உள்ள இடத்திற்குச் சென்று அவற்றை உண்ணும். அத்தகைய ஊராகிய மரந்தை, தலைவனோடு இருக்கும்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், தலைவனைப் பிரிந்து தனியே இருந்தால் வருத்தத்தைத் தருகிறது.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர் – புறநானூறு 209

குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர்

வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
கயலார் நாரை உகைத்த வாளை                           
– புறநானூறு 354

வயல்கள் சூழ்ந்த கழனிகட்கு வாயிலாக அமைந்த நீர்நிலையில்,  கயல் மீனை உண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீன்களை நீரில் விளையாடும் பெண்கள் பிடித்துத் தம் வளமுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்வர். 

பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு

உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை – நற்றிணை 91

கரையை மோதிப் பாயும் கடல். அந்தக் கடலில் மேயும் சிறுமீன். சிவந்த கடைக்கண் கொண்ட சிறுமீன். பதுங்கியிருக்கும் (உடங்கு) அந்தச் சிறுமீன் நாரைக்கு இரை. தன் பெட்டையுடன் சேர்ந்து மேயும் நாரைக்கு இரை.

செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்

தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை

மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,

இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் – அகநானூறு 240

சிவந்த பூக்களையும், கருநிறக் கிளைகளையும் உடைய ஞாழல் மரத்தில் கட்டியிருக்கும் தன் குஞ்சுகளை நினைத்துக்கொண்டு, நாரைப் பறவை நீலநிற நெய்தல் பூத்திருக்கும் உப்பங்கழியை விட்டு மாலையில் போய்விடுவதால் கானல் தனிமையாக இருக்கும்.

இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை

அன்றில் சேக்கும் முன்றில், பொன் என – அகநானூறு 360

மீன் உண்ணும் நாரையும், அன்றிலும் தங்கி வாழும் பனைமரம். அந்தப் பனைமரம் இருக்கும் முற்றம் கொண்டது நாங்கள் வாழும் இல்லம்.

புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை

வம்ப நாரை இனன் ஒலித்தன்ன – அகநானூறு 100

அவன் ஊரில் புதிய நாரை இனங்கள் (வெளிநாடுகளிலிலுந்து வந்த புதிய நாரைக்கூட்டம்) ஒலிப்பது போல ஊர் நம் உறவு பற்றிக் காதோடு காதாகப் பேசுகிறது.

பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த

வம்ப நாரை இரிய, ஒரு நாள்,- அகநானூறு 190

ஒரு நாள் அவன் வருவான். சோலையில் உயர்ந்த கிளையில் இருக்கும் நாரை பறந்தோடும்படி தேர் ஒலியுடன் வருவான். பொங்கும் ஊதைக்காற்று வீசினாலும் கடலோரமாக வருவான்.

வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை, – கலித்தொகை 128

வாடைக்காற்றில் மணம் பரப்பிக்கொண்டு தலையைச் சாய்த்துக்கொண்டு நிற்கும் தாழை மரத்தின் ஆடும் மடலில் இருந்துகொண்டு இருண்ட நள்ளிரவில் அசைநடை போடும் நாரை இடை விடாமல் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கும்

நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த

வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் – அகநானூறு 276

நீருக்குள் திரிந்து இரை தேடி அலையும் வாளைமீனுக்கும் அகப்படக்கூடாது. மேட்டில் அடி வைத்து நடந்து இரை தேடும் நாரைக்கும் அகப்படக்கூடாது என்று எண்ணி

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை – நற்றிணை 178

ஆடும் மூங்கிலின் உள்ளே இருக்கும் சோற்றுச் செதிள்களை போன்று சிறகு இறகில் தூவி மயிர் கொண்டது அகன்ற கால்களை உடைய நாரை.

வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்

தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை – அகநானூறு 40

கழனியில் நெல் அறுப்பார்கள்.

அப்போது பாணர் தண்ணுமை-மேளம் கொட்டுவார்கள்.

அந்த ஒலியைக் கேட்டு வயலில் மேயும் நாரை வளைந்த கொம்பு ஊதுவது போல ஒலி எழுப்பிக்கொண்டு பறந்து சென்று பனைமரத்து மடலுக்குள்ளே பதுங்கிக்கொள்ளும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *