Skip to content

சொல் பொருள்

(பெ) மரக்கலம், கப்பல்

வேர்ச்சொல்லியல்

இது navis என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது நௌகு என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ship

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் கடலில் பயணம்செய்து, வெளிநாட்டிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்ய உதவும்
பெரும் கப்பல் இது. எனவே நாவாய் என்பது ஒரு பெரிய பாய்மரக்கப்பல் ஆதல் வேண்டும்.

பால்கேழ்
வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை – பெரும் 319-321

பாலின் நிறமான
வெண்மையான தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும்
மரக்கலங்கள் சூழ்ந்த பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூல் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர்
உருத்திரங்கண்ணனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் துறைமுகம் பாடலில் நீர்ப்பாயல்துறை
எனப்படுகிறது. எனவே இது தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம் எனப்படும் கடல் மல்லை
என்னும் பட்டினத்தைக் குறிக்கும் எனலாம்.

வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 75-88

வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இனிய இசையை உடைய முரசம் முழங்க,
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்,
தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே

இந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனை,
மாங்குடி மருதனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் சாலியூர் என்பது நெற்குன்றம்
எனப்படும் மேற்குக்கடற்கரைப் பட்டினம் என்ற கருத்து உள்ளது. தனது மேலைநாட்டு
வணிகத்துக்காகப் பாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றி ஆண்டான் என்பதை மேலைநாட்டு
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலைநாட்டுச் சரக்குகளை இறக்குமதி செய்யும்
நாவாய்கள் இங்கு வந்து சென்றன என்ற கிறிப்பினின்றும், நாவாய் என்பது நீண்ட கடற்பயணம்
மேற்கொள்ளும் பெரிய பாய்மரக்கப்பல் என்பது பெறப்படும்.

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியோடு அனைத்தும் – மது 321- 323

சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் இதனை உறுதிப்படுத்தும்.

பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 375 – 379

பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் ஒரு நாவாயைப் பற்றி விளக்கமாக உரைப்பதைக் காணலாம்.

மேலைநாடுகளுக்கு நாவாய் ஓட்டி, தமிழர் வாணிபம் செய்தனர் என்பதை நற்றிணை குறிப்பிடுகிறது.

எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த 5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன – நற் 295/4-7

எமது தந்தையின்,
வேறுபட்ட பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த
பலவாறான வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும்
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ – புறம் 66-68

என்ற புறப்பாட்டு இதனை உறுதிப்படுத்தும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு மூலச்சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *