Skip to content

சொல் பொருள்

(வி) 1. நேராகு, உயர், 2. வளையாமல் நேராகு, 3. விறைப்பாக இரு, 4. முன் நோக்கிப் புடைத்துக்கொண்டிரு, 5. அதிகமாகு, எல்லை மிகு, 6. நீட்டி உயர்த்து, 7. இடையிடு, 8. பரவு,

சொல் பொருள் விளக்கம்

நேராகு, உயர், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stand upright, become erect, be straight, be stiff, projecting forward, exceed the limit, be outstretched, interpose, spread out, expand

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி – நெடு 103,104

பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
(நெய்)வற்றிப்போகும்போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி),

குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/2-5

நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும்
கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை
கையகப்படுத்தச் சென்றபோது
நெடிய நேரான தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட

முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 113,114

(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி விறைப்பான, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்

சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1

வில் பயிற்சியால் முன்னோக்கிப் புடைத்துக்கொண்டிருக்கும் சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388

நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9

நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து ((கழுத்தை) நீட்டி உயர்த்தி கூவும் குயில்கள்
என்னை எள்ளி நகையாட,

உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரை மலை எல்லாம்
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியல் வானம் போல பொலியும்
நெடியாய் – பரி 19/78-84

நிறம் மிகுந்த தோன்றியும், மலர்ந்த பூங்கொத்துக்களையுடைய நறவமும்,
பருவம் பாராமல் எப்போதும் பூக்கும் கோங்கமும், அதனோடு மாறுபட்ட நிறத்தையுடைய
இலவமலர்களும்,
செறிவாகக்கட்டியவை, கோத்தவை, நெய்யப்பட்டவை, தூக்கிக்
கட்டப்பட்டவை ஆகிய மாலைகளைப் போல மலைப்பக்கம் எங்கும்
நிறைந்தும், கலந்தும், இடையிட்டும், நெருங்கியும்
விடியற்காலத்து அகன்ற வானத்தைப் போன்று பொலிவுற்றுத் திகழும்
நெடியவனே!

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 150,151

கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏறிப்பரவ,
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *